கற்றது தமிழ் மற்றும் தங்கமீன்கள் போன்ற உணர்ச்சிகரமான கதைகள் சொன்ன ராம் தரமணியில் எப்படி ஆண்கள் எந்த வர்க்கத்தை சோர்ந்தவர்களாக இருந்தாலும் பெண்களை ஒரே தொனியில் பார்த்து துன்புறுத்தி கடைசியில் கண் கெட்ட பின்னரே தம் தவற்றை புரிந்துகொள்கிறார்கள் என்பதை ஆணித்தரமாக சொல்லி மீண்டும் தன் திறமையை நிரூபித்திருக்கிறார்.
கால் சென்டரில் வேலை செய்யும் ஹீரோ வசந்த் ரவி சக தொழிலாளியான அஞ்சலி மீது காதல் கொண்டு ஏமாற்றப்பட்டு ஒன்றுக்கும் உதவாத ஆளாக மாறி கிட்டத்தட்ட நாடோடி வாழ்க்கை வாழ்கிறார். இடையில் தற்செயலாக மழைக்கு ஓதுங்க அல்ட்ரா மாடர்ன் ஐ டி பெண் ஆண்டரியாவுடன் நட்பாகி பின் காதலாகிறது. வழக்கம் போல் எல்லா ஆண்களை போலவும் ஆண்ட்ரியா மீது சந்தேகப்பட்டு துன்புறுத்த ஆரம்பிக்க காதல் முறிந்து பின் சில விபரீத முடிவுகள் எடுத்து கடைசியில் என்னாகிறார் என்பதே மீதிக் கதை.
அல்டரா மாடர்ன் கேரக்டரை அப்படியே ஊதி தள்ளி விடுகிறார் ஆண்ட்ரியா. அவருடைய திரைப்பயணத்தில் இது தான் மணிமகுடம். தன் ஐந்து வயது குழந்தை மீது பாசம் காட்டுவதிலாகட்டும், தன்னை வசப்படுத்த நினைக்கும் ஆண்களிடம் திமிராக விலகுவதாகட்டும் எல்லாத்தையும் விட ஹீரோவிடம் மட்டும் காட்டும் அந்த கனிவு, காதல் என அசாத்தியமாக அசத்துகிறார். தன்னை கேவலப்படுத்திய வசந்தை புரட்டியெடுக்கும் இன்டெர்வல் காட்சியும் மற்றும் படம் நெடுக அளவான நடிப்பில் ஆழமாக பதிந்து இந்த ஆண்டின் சிறந்த நடிகை விருதுக்கு ஆண்ட்ரியா இப்போதே நாமினேட்டட்.
புதுமுகம் வசந்த் ரவியும் ஆண்டிரியாவுக்கு ஈடு கொடுத்து கவனம் ஈர்க்கிறார். ஒரு குழப்பவாதியான இந்த கால ஆணை அப்படியே கண் முன் நிறுத்துகிறார். அழகம்பெருமாளுடனான அந்த முக்கிய காட்சியில் நடிப்பில் ஸ்கோர் செய்யகிறார். சிறப்பு தோற்றத்தில் அஞ்சலி அதிகம் பேசாமல் தன் கண்களாலேயே தனக்குள் நடக்கும் மாற்றங்கள் காதல் அவமானம் வேதனை அத்தனையும் காட்டிவிட்டு சபாஷ் பெறுகிறார்.ஆண்ட்ரியாவின் மகனாக வரும் அந்த குட்டி பையன் ஏட்ரியன் மனசுக்குள் வந்து அழகாக உட்க்கார்ந்து கொள்கிறான். அழகம்பெருமாளுக்கும் அபார நடிப்பை வெளிப்படுத்த ஒரு ஆழமான காட்சியுண்டு. கதைக்கு திருப்புமுனையாக ஒரு முக்கிய வேடத்தில் தயாரிப்பாளர் ஜெ எஸ் கே சதீஷும் அறிமுகமாகியிருகிறார். இதர நடிகர்கள் அனைவருமே நல்ல தேர்வு.
இந்த படத்தில் ராம் ஒரு புது யுக்தியை மிகவும் ரசிக்கும்படி கையாண்டிருக்கிறார். அதவாது வாய்ஸ் ஓவர் மூலம் கதையை நகர்த்தியும் கதைக்கு சம்பந்தமே இல்லாத சில கலைகளையும் அள்ளித் தெளித்து அரங்கை அதிரிபுதிரி பண்ணியிருக்கிறார். குறிப்பாக புகை மற்றும் குடி விழிப்புணர்வை படத்தில் காட்டுவதை கிண்டல் செய்யும் போதும் மோடியின் பண மதிப்பிழப்பு நடவடிக்கைபற்றி கூறும்போதும் ஆடியன்ஸ் கரகோஷம் விண்ணை பிளக்கிறது. தரமணியை பார்த்துவிட்டு வெளியே வரும் ஆண்கள் நிச்சயம் ஒரு கணம் தாங்கள் பெண்களை நடத்தும் விதம் தவறு என்று நிச்சயம் யோசிப்பார்கள் இதுவே ராமின் மிக பெரிய வெற்றி.
யுவன் ஷங்கர் ராஜா இசையில் நா முத்துக்குமார் வரிகளில் வரும் அத்தனை பாடல்களும் கதையோடு ஒன்றி வந்து ரசிக்க வைக்கின்றன. பின்னணியில் யுவன் அபாரம். தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவும் ஸ்ரீகர் பிரசாத்தின் படத்தொகுப்பும் முதல் தரம். ஒரு ஆழமான கதையை எடுத்து கொண்டு அதில் தன் சமுதாய அக்கறையை ஆங்காங்கே புகுத்தி தான் பாலுமகேந்திராவின் சிஷியன் என்பதை மீண்டும் ராம் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.
மைனஸ் என்று பார்த்தல் ராம் வசந்த் ரவியை இயல்பாக நடிக்க வைக்காமல் தன் கேரக்டரை அவர் மீது திணித்தது போல் நிறைய இடங்களில் ராமாகவே தெரிகிறார் வசந்த் பாவம் அவர் தவறு இதில் இல்லை. உறுத்தும் ஒரு கேள்வி, எண்பது ஆயிரம் ருபாய் சம்பளத்தில் இருக்கும் ஆண்ட்ரியா போன்ற ஒரு அழகான பெண் கிட்டத்தட்ட ஒரு நாடோடி போல் இருக்கும் வசந்தை எதற்கு காதலிக்க வேண்டும்? அதே போல் தரமணியில் இந்த கதை சம்பந்த பட்டவர்கள் தவிர வேறு யாருமே இல்லையா என்பது போல் எல்லா காட்சிகளிலும் வெறுமை. ஆண்ட்ரியா வசந்த் உறவு என்னானது என்பதை அந்தரத்தில் விட்டு கதை இரண்டாம் பாதியில் தடம் மாறி எங்கெங்கோ செல்வது அலுப்பை தருகிறது. அதிலும் ஹீரோ செல்லில் பேசி பெண்களை ஏமாற்றுவதும் திருடிய பணத்தை உரியவர் குடும்பத்தில் சேர்க்க முயற்சி செய்வதும் படு செயற்கை. ஆரம்பத்திலேயே ராம் சாதுர்யமாக தன் வாய்ஸ் ஒவேரில் முட்டிக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடும் கதையிது யாருக்கு எது புரிகிறதோ அதுதான் என்று சொன்னாலும் நமக்கு பாதி திருப்தி தான் மிஞ்சுகிறது.
ஆண்ட்ரியாவின் அபார நடிப்புக்காகவும் நவீன காதலையும் வாழ்க்கையும் அழுத்தமாக சொல்லும் திரைகதைக்காகவும் தரமணிக்கு தாராளமாக ஒரு விசிட் அடிக்கலாம்.
Comments