நர்ஸ்-ன் கவனக்குறைவு....! பச்சிளங்குழந்தையின் விரல் போன பரிதாபம்...!
- IndiaGlitz, [Tuesday,June 08 2021]
செவிலியர் ஒருவரின் கவனக்குறைவால், பிறந்து 14 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையின் விரல் பரிதாபமாக பறிபோயுள்ளது.
தஞ்சையில், காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் கணேசன், பிரியதர்ஷினி தம்பதி. இவர்களுக்கு கடந்த மாதம் 25-ஆம் தேதி தஞ்சை அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. குறைப்பிரவசம் என்பதால் குழந்தை 9 மாதங்களிலே பிறந்துவிட்டது. பச்சிளம் குழந்தையின் வயிற்றுப்பகுதியில் பிரச்சனை இருந்ததால், தாய்ப்பால் கொடுக்கவேண்டாம் என்று மருத்துவர்கள் கூற, இத்தனை நாட்கள் குளுக்கோஸ் ஏற்றப்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யும் போது, அவளின் கையில் உள்ள ஊசியை எடுப்பதற்கு பதிலாக, செவிலியர் கவனக்குறைவுடன் கட்டை விரலை துண்டித்துவிட்டார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மருத்துவமனை நிர்வாகத்திடம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரளித்தனர். ஆனால் இதுபற்றி எந்த விளக்கமும் அவர்கள் கூறவில்லை.
இதுகுறித்து தஞ்சை அரசு மருத்துவமனை முதல்வர் ரவிக்குமார் கூறியிருப்பதாவது, குழந்தையின் கையில், கட்டை விரலில் உள்ள மேல்பகுதியில் இருக்கும் சதைப்பகுதி மட்டுமே வெட்டப்பட்டுள்ளது. அப்பகுதியை இணைத்து தையல் போட்டுள்ளோம். இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறோம், செவிலியர் மீது தவறு என அறியப்பட்டால், தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.