ஸ்டாலினை பாராட்டிய ரஜினி மோடியை ஏன் பாராட்டவில்லை. தமிழிசை கேள்வி
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று பேசிய அரசியல் குறித்த பேச்சு தமிழக அரசியலில் ஒரு புயலை கிளப்பிவிட்டது. இன்றைய அவருடைய பேச்சால் அவர் கண்டிப்பாக அரசியலுக்கு வெகுவிரைவில் வந்துவிடுவார் என்றே ரசிகர்கள் உறுதியாக நம்புகின்றனர். இந்நிலையில் ரஜினியின் அரசியல் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுத்து அனைத்து அரசியல்வாதிகளும் பதில் சொல்லி வருவதை பார்க்கும்போது அவர் அரசியலுக்கு வந்துவிடக்கூடாது என்றே பல அரசியல்வாதிகளின் உள்மனங்களில் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் இன்றைய ரஜினியின் பேச்சு குறித்து கருத்து தெரிவிக்கையில் ஊழல் குற்றச்சாட்டுக்கள் உடையவர்கள், ஜாதிய அரசியல்வாதிகளை புகழ்ந்து பேசியுள்ள ரஜினி, சிறந்த நிர்வாகியான பிரதமர் மோடியை ஏன் புகழ்ந்து பேசவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து தமிழிசை மேலும் கூறியதாவது:
சகோதரர் ரஜனிகாந்த் தனக்கென்று தனி ரசிகர் கூட்டத்தை வைத்திருப்பவர். அரசியலிலும் எதிர்பார்ப்புக்கு உள்ளாகி இருப்பவர். ஜனநாயக நாட்டில் அரசியலுக்கு வர அவருக்கு முழு உரிமை இருக்கிறது. அரசியலுக்கு வந்தால் வரவேற்போம். அவரது பேச்சு எப்போதும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். அதற்கு காரணம் யதார்த்தமான நிலைமையை வெளிப்படுத்துவார். ஆனால் இன்று அவரது பேச்சு முரண்பாடாகவே அமைந்து இருக்கிறது. அரசியல் அமைப்பு கெட்டு போய் விட்டது. ஜனநாயகம் கெட்டு விட்டு என்று தனது கருத்தை பதிவு செய்து இருக்கிறார்.
அதே நேரத்தில் இன்றைய அரசியலில் மு.க.ஸ்டாலின் நல்ல திறமையான நிர்வாகி என்று பாராட்டி இருக்கிறார். தமிழகத்தில் அரசியல் கெட்டு விட்டதாக ஆதங்கப்படும் ரஜினி தி.மு.க.வை பாராட்டி இருப்பது வியப்பாக இருக்கிறது. மு.க.ஸ்டாலினும் அவரது குடும்பமும் தானே இத்தனை ஆண்டுகள் தமிழகத்தை ஆண்டது. நேரடியாகவோ, மறைமுகமாகவோ தமிழக அரசியல் கெட்டுப் போவதற்கு அவர்களும் ஒரு காரணம் தானே? மாற்றம் வர வேண்டும் என்று எதிர் பார்க்கும் ரஜினி மீண்டும் ஏமாற்றத்தை அங்கீகரிப்பது முரண்பாடாக தெரிகிறது.
பா.ம.க.வின் அன்புமணி ராமதாசை பாராட்டி இருக்கிறார். அவரது நிர்வாகத்தில்தான் மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியதில் மிகப்பெரிய ஊழல் நடந்தது. அன்புமணி மீதும் வழக்கு இருக்கிறது. திருமாவளவன் தலித்துகளுக்காக பாடுபடுபவர், சீமான் மிகச்சிறந்த பேராளி என்று பாராட்டி இருக்கிறார். இவர்களின் அரசியல் நிலைப்பாடு எல்லோருக்கும் தெரிந்ததே. திருமாவளவன், அன்புமணி போன்றவர்கள் சாதிய பின்புலத்தில் அரசியல் நடத்துபவர்கள்.
நாட்டில் புரையோடிப் போன ஊழலை ஒழித்து நிர்வாக சீர்கேட்டை சீர்படுத்த பிரதமர் மோடி உழைத்து வருகிறார். நடைமுறை சிக்கல்களை தீர்த்து நாட்டை நல்ல பாதையில் வழி நடத்த பாடுபடும் மோடியை அவர் முதலில் பாராட்டி இருக்கலாம். மோடியின் நிர்வாகமும், செயல்பாடும் ரஜினிக்கு தெரியாததல்ல. சிஸ்டத்தில் மாற்றம் வர வேண்டும் என்று ரஜினி எதிர்பார்க்கிறார். அவர் எதிர்பார்க்கும் மாற்றத்தை நிகழ்த்தி வரும் மோடியை அவர் பாராட்டி இருக்க வேண்டும் என்பது எனது கருத்து. அவரை பாராட்ட தயங்கியது ஏன்?
44 ஆண்டுகளாக தமிழக கலைத்துறையில் இருப்பவர். தமிழக மக்களால் வளர்ந்தவர். கலைத்துறையில் இருந்து செய்ய முடியாததை அரசியலுக்கு வந்து செய்வார் என்று நம்புவோம். நடிகர்கள் நாட்டை ஆளக் கூடாது என்று பகிரங்கமாக எதிர்ப்பது பா.ம.க. ஒரு காலத்தில் ரஜினியின் படம் ஓட முடியாத சூழ்நிலை கூட உருவானது. வருங்காலங்களில் தனது படத்துக்கு எதிர்ப்புகள் எந்த மூலையில் இருந்தும் வரக்கூடாது என்பதை சரியாக சமாளிக்கும் வகையிலேயே பேசி இருக்கிறார். பாராட்டுக்கள்.
இவ்வாறு தமிழிசை செளந்திரராஜன் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments