Download App

Tamizh Padam 2 Review

'தமிழ்ப்படம் 2': திரையுலகினர்களை வச்சு செய்யும் படம்

சிவா நடிப்பில் சி.எஸ்.அமுதன் இயக்கியுள்ள 'தமிழ்ப்படம் 2' படத்தின் வித்தியாசமான புரமோஷன் இந்த படத்தின் எதிர்பார்ப்பை எகிற வைத்தது. பெரிய ஸ்டார்களுக்கு இணையாக அதிகாலை காட்சி திரையிடும் அளவுக்கு இந்த படத்தின் புரமோஷன்கள் இருந்தது போல் படமும் இருந்ததா? என்பதை பார்ப்போம்

பல உயிர்கள் பலியான ஒரு கலவரத்தை ஒரே ஒரு இட்லியை வைத்து பேசியே அடக்கிவிடுகிறார் சிவா. எனவே போலீசில் இருந்து அவரை மீண்டும் போலீஸில் சேர்ந்து பணிபுரியும்படி உயரதிகாரி கூற, அசிஸ்டெண்ட் கமிஷனாராக பொறுப்பேற்கிறார் சிவா. பல சட்டவிரோத செயல்கள் செய்துவரும் வில்லன் 'P' என்ற சதீஷை பிடிப்பதுதான் அவருக்கு கொடுக்கும் முதல் வேலை. சதீஷை பல முயற்சிகளுக்கு பின் பிடித்து என்கவுண்டர் செய்கிறார் சிவா. ஆனாலும் மீண்டும் சதீஷ் உயிர்த்தெழுகிறார். அதற்கு காரணம் என்ன என்று 3000 வருடங்களுக்கு முன் ஒரு பிளாஷ்பேக். சிவா இறுதியில் சதீஷை பிடித்தாரா? என்பதுதான் இந்த படத்தின் மீதிக்கதை

அகில உலக சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் இந்த படத்தில் நடித்திருக்கும் சிவாவிடம் நாம் என்ன எதிர்பார்த்தோமோ அதற்கு மேல் தந்துள்ளார். கடைசியில் என்னையும் நடிக்க வைச்சிட்டிங்களாடா? என்று அவர் கூறும் காட்சியில் சிரிக்காதவர்களே இல்லை. அவரது வசன உச்சரிப்பு, பாடி லாங்க்வேஜ் மிகப்பெரிய பிளஸ். சிவா இல்லாமல் இந்த படத்தின் இயக்குனர் நினைத்து கூட பார்த்திருக்க முடியாது.

திஷா பாண்டே, ஐஸ்வர்யா மேனன் என இரண்டு நாயகிகள், சிவாவின் காமெடி நடிப்புக்கு முன் இவர்கள் இருவருமே காணாமல் போய்விடுகின்றனர். வழக்கம் போல் பாடல்களுக்கு உதவும் நாயகிகள்

சதீஷ் இந்த முறை காமெடி வில்லனாக முயற்சி செய்துள்ளார். இவருக்கு சிவாவை விட அதிக கெட்டப்புகள் இந்த படத்தில் உள்ளன. சிவாவுடன் ஒரு நடனப்போட்டியும் உண்டு. நீண்ட நாட்களுக்கு சதீஷ் காமெடி செய்த படம் இதுதான்

கல்லூரி மாணவர்களாக மனோபாலா, ஆர்.சுந்தர்ராஜன், சந்தானபாரதி ஆகியோர் தோன்றும் காட்சிகள் நல்ல கலகலப்பு. கஸ்தூரியின் ஐட்டம் சாங், கவர்ச்சி பிரியர்களுக்கு சரியான தீனி.

கண்ணன் இசையில் இரண்டு பாடல்கள் ஓகே ரகம். பின்னணி இசையை வைத்துதான் பல காட்சிகள் இது எந்த படத்தில் உள்ளது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

இயக்குனர் சி.எஸ்.அமுதன், 'தமிழ்ப்படம்' முதல் பாகம் போலவே இதுவும் ஸ்பூஃப் சினிமா என்பதை முடிவு செய்து அதற்கேற்ப திரைக்கதை அமைத்துள்ளார். அனேகமாக இவர் கைவைக்காத படங்களே இல்லை என்று கூறலாம். ஹாலிவுட் படங்களான 'ஸ்பீடு', 'டெர்மினேட்டர்', டைட்டானிக்' போன்ற படங்களையும் இவர் விட்டுவைக்கவில்லை. இந்த காட்சி எந்த படத்தை கலாய்த்து எடுக்கப்பட்டது என்று நாம் யோசிப்பதற்குள் அடுத்த கலாய்ப்பு காட்சி என மாறி மாறி வருவதால் தியேட்டரில் கலகலப்புக்கு பஞ்சமில்லை. குறிப்பாக மங்காத்தா, வேதாளம், விவேகம் பட காட்சிகளுக்கு தியேட்டரே அதிர்வது எதனால் என்பதை சொல்ல தேவையில்லை. அதேபோல் கிளைமாக்ஸில் 'கபாலி', 'பாகுபலி' மற்றும் மெட்ராஸ் படங்களை ஸ்பூஃப் செய்திருப்பதில் புத்திசாலித்தனம் தெரிகிறது. திரையுலகினர்களை மட்டுமின்றி அரசியல்வாதிகளை அமுதன் கைவைக்க தவறவில்லை. சமாதியில் சத்தியம் செய்வது முதல், தர்மயுத்தம் தியானம் வரை சமீபத்தில் நடந்த பல அரசியல் நிகழ்வுகளை இந்த படம் ஞாபகப்படுத்துகிறது. சி.எஸ்.அமுதனின் கடுமையான ஹோம்வொர்க் படத்தில் தெரிகிறது.

ஆனால் அதே நேரத்தில் படம் முழுவதும் ஸ்பூஃப் என்பது கொஞ்சம் சலிப்படைய வைக்கின்றது. இதில் பல ஸ்பூஃப் காட்சிகள் மொக்கையாக இருப்பதும் படத்தின் மைனஸ். அதேபோல் படத்தின் நீளமும் கொஞ்சம் அதிகமாக உள்ளது. மேலும் இந்த படத்தில் உள்ள முக்கிய ஸ்பூஃப் காட்சிகள் அனைத்தும் டீசர், டிரைலரில் மற்றும் போஸ்டரில் பார்த்துவிட்டதால் சுவாரஸ்யமும் குறைகிறது.

மொத்தத்தில் இதுவொரு ஸ்பூஃப் சினிமா என்பதை மனதில் வைத்து கொண்டு காமெடியை மட்டும் ரசிக்க நினைப்பவர்கள் தாராளமாக பார்க்கலாம்

Rating : 2.8 / 5.0