வித்தியாசமான முறை.....! ஆக்சிஜனுக்காக நிதி திரட்டிய யுடியூபர்ஸ்....!
- IndiaGlitz, [Wednesday,June 02 2021]
பிரபலமான யுடியூபர்கள் இணைந்து, ஆக்சிஜன் உற்பத்தி மையத்திற்காக நிதி திரட்டிய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் நெகிழ்வை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி மையத்திற்காக, நிதி திரட்டும் பணியில் பலரும் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் மற்றும் ரோட்டரி பிரைட் உள்ளிட்டவை இணைந்து, இப்பணியை செய்து வருகின்றன. இவர்களுக்கு உதவும் நோக்கில், சுமார் 25-க்கும் அதிகமான பிரபல யுடியூபர்கள் இணைந்து, தமிழ் இணைய படைப்பாளிகள் சங்கம் என்ற அமைப்பு மூலமாக, தொடர் நேரலை வழியாக நிதி திரட்டினர் . We For O2 என்ற தலைப்பின் கீழ், கடந்த மே -30 -ஆம் தேதி, மாலை 5 மணி முதல் 11 மணிவரை நிதி திரட்டுவதற்காக, பிரமாண்ட நேரலை நிகழ்ச்சியை நடத்தினர். இதன் தொடக்கவிழாவில், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, ரோட்டரி பிரைட் அன்பரசு கலந்து கொள்ள, 'நிகர் கலைக்குழு'-வின் வரவேற்பு பறைஇசை நடைபெற்றது. இதையடுத்து பாடகர் ஆந்தங்குடி இளையராஜா பாடல் பாடி நிகழ்வை துவங்கினார்.
தமிழ் யுடியூபர்கள் ஏப்பம்பட்டி அணி , பாப்பம்பட்டி அணி இரண்டு குழுக்களாக பிரிந்து, Dumb Charades, Answer or Dare உள்ளிட்ட விளையாட்டுக்களை விளையாடினர். இந்நேரலை நிகழ்வில் தமிழ் கேள்வி செந்தில்வேல், பத்திரிகையாளர் ஜென்ராம், 'யூடர்ன்' ஐயன் கார்த்திகேயன், 'நக்கலைட்ஸ்' பிரசன்னா , 'பிஹைண்ட்வுட்ஸ்' ஆவுடையப்பன், 'பிளாக் ஷீப்' டியூட் விக்கி, மதன் கௌரி, 'அரண் செய்' ஹசீஃப், 'பிலிப் பிலிப்' குருபாய் , 'ஜிப்ஸி ஜின்ஸ்' கௌதமி, மாரீஸ் , 'டெம்பிள் மங்கீஸ்' விஜய் வரதராஜ், 'பிலிப் பிலிப்' சர்வ்ஸ் சகா, 'ஜிப்சி ஜின்ஸ்' பென்னி , 'மஞ்ச நோட்டீஸ்' ஜென்சன் திவாகர் , 'ஃபேக் ஐடி' அரவிந்த், 'பிளாக் ஷீப்' ஆர்ஜே.விக்னேஷ்காந்த், 'Mr.GK' தர்மதுரை, மிர்ச்சி சபா, 'நீ யார்டா கோமாளி' பிபியன், ஆர்ஜே ரமணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதன் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவமனை ஆக்சிஜன் மையத்திற்காக, சுமார் 22 லட்சம் ரூபாய் நிதி திரட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.