தமிழகத்தில் ஊரடங்கு....! எந்த மாவட்டங்களில் கட்டுப்பாடு... எங்கெங்கு தளர்வுகள்....!
- IndiaGlitz, [Wednesday,June 02 2021]
தமிழகத்தில் கொரோனா காரணமாக, ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ஒரு சில மாவட்டங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட உள்ளதாக, செய்திகள் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு என்பது 30 ஆயிரத்திற்கும் குறைவாக பதிவாகி வருகிறது. தற்போது 2,96,131 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை 24,722 பேர் கொரோனாவிற்கு பலியான நிலையில், 18,02,176 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அந்த வகையில் நம் மாநிலத்தில் கோவிட் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில், முழு ஊரடங்கை மாநில அரசு அறிவித்துள்ளது. கடந்த மே, மாதம் -24-ஆம் தேதி முதல், கடுமையான கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. மக்கள் அத்தியாவசிய மருந்து பொருட்கள் வாங்க மற்றும் தேவைகளுக்காக மட்டுமே வெளியில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வியாபாரிகள் வாகனங்களில் மளிகைப்பொருட்கள், பழங்கள், காய்கறிகள் மட்டும் கொண்டு விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்சமயம் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மட்டும் தளர்வுகள் அறிவிக்கப்பட உள்ளதாக, தகவல்கள் வெளியாகி உள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும், தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களிலும், தளர்வுகள் அறிவிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. 10 மணிக்கு மேல் பொதுமக்கள் வெளியில் செல்லலாம், அத்தியாவசிய தேவைகளுக்காக கடைகள் இயங்கலாம் உள்ளிட்ட தளர்வுகள் வெளியாக உள்ளதாக செய்திகள் கூறுகின்றது.
அதேபோல் கொரோனா அதிகரிக்கும் மாவட்டங்களாக கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்கள் இருந்து வருகிறது. இதனால் இந்த மாவட்டங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் தொடரும் எனக் கூறப்படுகிறது.