பொதுமக்களும் வானிலையை கணிக்கலாம்: தமிழ்நாடு வெதர்மேன்
- IndiaGlitz, [Tuesday,November 07 2017]
ஒரு காலத்தில் வானிலை அறிக்கை என்றால் உடனே அனைவருக்கும் ஞாபகம் வரும் பெயர் ரமணன் அவர்கள் தான். மழைக்காலத்தில் அவர்தான் மக்களின் ஹீரோவாக இருந்தார். அவரை பற்றி கேலி கிண்டல்கள் வந்தாலும் அவரது வானிலை அறிக்கை புகழ் பெற்றது.
இந்த நிலையில் ரமணன் அவர்களை அடுத்து ஃபேஸ்புக் மூலம் புகழ்பெற்றார் தமிழ்நாடு வெதர்மேன். இவர் இந்திய வானிலை மையத்தில் பணிபுரியவில்லை என்றாலும் ரேடார் மூலம் மழையை சரியாக கணித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார்.
சமீபத்தில் “இந்திய வானிலை ஆய்வு மையமே அரசால் எச்சரிக்கை மற்றும் முன்னறிவிப்பு போன்ற தகவல்களை முறையாக மக்களுக்கு அளிக்க அதிகாரபூர்வமாக ஏற்படுத்தப்பட்ட துறை. இணைய வசதியை வைத்துக் கொண்டு ராடாரை பார்த்து மழை தொடர்பான அறிவிப்புகளை செய்வது குழப்பத்தை ஏற்படுத்த வல்லது' என்று தமிழ்நாடு வெதர்மேன் போன்றவர்களை ரமணன் கூறியிருந்தார். ரமணன் அவர்களின் இந்த கூற்றை பணிவன்புடன் மறுத்த தமிழ்நாடு வெதர்மேன் அதற்கான விளக்கத்தையும் அளித்தார்.
இந்த நிலையில் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் மழை கணிப்பு குறித்து மீண்டும் ஒரு விளக்கத்தை அவர் அளித்துள்ளார். ராடார் மூலம் தற்போதைய நிலையை மட்டும் பிரதிபலிக்க முடியும் என்றும் முந்தைய இரவே, மழை தொடர்பான முன்னறிவிப்பை செய்து, மழை பெய்யும் பொழுது உடனுக்குடன் நிகழ்நேர நிலைத் தகவல்களையும் பரிமாற முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் பிபிசி வானிலை மையம் சென்னையில் 500மிமீ மழை பெய்யும் என்றும், புயல் உருவாகும் என்றும் அறிவித்திருந்தது. ஆனால் அது நடந்ததா? என்று கேள்வி எழுப்பியுள்ள தமிழ்நாடு வெதர்மேன், வானிலை அறிக்கையை பொருத்தவரை எவ்வளவு நவீன முறையை கையாண்டாலும் 100% துல்லியமாக யாராலும் கணிக்க முடியாது என்றும், அதுதான் இயற்கை என்றும் அவர் கூறியுள்ளார்
தற்போதைய வானிலை நிலைய அதிகாரிகள் மீது தான் மிகுந்த மரியாதை வைத்திருப்பதாகவும், அவர்களுக்கு இருக்கும் அழுத்தம் எந்த அளவு என்பது தனக்கு நன்றாக புரியும் என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார். மேலும் பொதுமக்களையும் வானிலையை கணிக்க வைக்க வேண்டும் என்பதே தனது எண்ணம் என்றும், தன்னுடைய பதிவுகளை ரெகுலராக பார்த்து வருபவர்களுக்கு இது சாத்தியமே என்றும் அவர் கூறியுள்ளார்.