ரூ.20 கோடி மோசடியா? தீபாவிடம் போலீஸ் விசாரணை
- IndiaGlitz, [Monday,April 24 2017]
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அரசியல் வாரீசாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டவர் ஜெ.தீபா. இவரது வீட்டின் முன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொண்டர்கள் குவிந்ததை அனைவரும் அறிவர்.
ஆனால் அதன்பின்னர் தீபா ஆரம்பித்த பேரவையை எதிர்த்து அவரது கணவரே குரல் கொடுத்தது மட்டுமின்றி அவரும் தனியாக கட்சி தொடங்கியது, கணவரை தீபா வீட்டை விட்டு விரட்டியதாக வெளிவந்த செய்தி ஆகியவற்றால் தீபாவின் செல்வாக்கு குறைய தொடங்கியதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் தீபா தொடங்கிய 'எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் உறுப்பினர் சேர்க்கையின் மூலம் வசூலான பணத்தில் 20 கோடி ரூபாயை தீபா மோசடி செய்ததாக ஜானகிராமன் என்பவர் மேற்கு மாம்பலம் காவல்துறையில் புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் இன்று தீபாவிடம் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தீபா, 'தனது பேரவை சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடப்பதாகவும், தன் மீது புகார் அளித்தவர் யார் என்றே தனக்கு தெரியாது என்றும் ஆளுங்கட்சியின் தூண்டுதல் பெயரிலும், என்னை அரசியலில் இருந்து விரட்டியடிக்க வேண்டும் என்ற நோக்கத்திலும் இந்த பொய்ப்புகார் கொடுக்கபப்ட்டுள்ளதாக கூறினார். மேலும் தன்மீதான புகாரை தான் சட்டப்படி சந்திக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.