மாணவர்களின் சேர்க்கை விகிதம்: கேரளாவை பின்னுக்குத் தள்ளி முதலிடம் வகிக்கும் தமிழகம்!!!

  • IndiaGlitz, [Friday,July 31 2020]

கல்வித்துறையில் தமிழகத்தை பொறுத்தவரை 18-23 வயதுடைய மாணவர்களின் சேர்க்கை விகிதம் கேரளாவைவிட அதிகமாக இருக்கிறது எனப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த செப்டம்பர் 2019 இன் புள்ளிவிவரக் கணக்குப்படி தமிழகத்தில் உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை 49 விழுக்காடாக அதிகரித்து இருக்கிறது. இந்த எண்ணிக்கை கல்வித்துறையில் சிறந்த மாநிலமாகக் கருதப்படும் கேரளாவைவிட அதிகம் என்பது பெருமைக்குரிய விஷயமாகப் பார்க்கப்படுகிறது.கடந்த செப்டம்பர் 2019 கணக்குப்படி உயர்கல்வியில் சேர்ந்து படிக்கும் மாணவர்களின் விழுக்காடு கேரளாவைப் பொறுத்த வரைக்கும் 37 விழுக்காடாக இருக்கிறது. தெலுங்கானாவில் 36%, ஆந்திராவில் 32%, மகாராஷ்டிராவில் 32%, கர்நாடகாவில் 28% , குஜராத்தில் 20% என மற்ற மாநிலங்கள் அனைத்தும் பின்தங்கியே இருக்கின்றன. இந்நிலையில் தமிழக மாணவர்களின் சேர்க்கை விகிதம் ஒட்டுமொத்த இந்திய மாநிலங்களிலேயே முதலிடத்தைப் பெற்று சிறந்து விளங்குகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் பள்ளிக் கல்வியை முடித்துக் கொண்டு பட்டப்படிப்பு மற்றும் உயர் கல்வியில் சேருவோரின் எண்ணிக்கை உயர்ந்து காணப்படுவதற்கு நல்ல கல்விச்சூழல் அமைந்திருப்பதே காரணமாகவும் கருதப்படுகிறது.