தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி யார் யாருக்கு?? சுகாதாரத் துறையின் முக்கிய அறிவிப்பு!!!
- IndiaGlitz, [Wednesday,January 06 2021]
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி அவரசகால பயன்பாடுக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளது. இதனால் வரும் ஜனவரி 13 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி விநியோகிக்கப்பட இருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்து உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் வரும் ஜனவரி 8 ஆம் தேதி கொரோனா தடுப்பூசிக்கான ஒத்திகை நடக்க இருப்பதாகவும் அதைத் தொடர்ந்து கொரோனா தடுப்பூசியை 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் சுகாதார மற்றும் முன்களப் பணியாளர்களுக்கும் வழங்க இருப்பதாகவும் சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள அறிவிப்பில், தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் முதலில் சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் அதன்பிறகு முதியவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் தெரிவித்து உள்ளார். மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்ப 33 லட்சம் ஊசிகள் தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்து உள்ளார்.
அதன் முதற்கட்டமாக 6 லட்சம் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்றும், இதற்காக தமிழகம் முழுவதும் 45 இடங்களில் தடுப்பூசி மருந்தை இருப்பு வைப்பதற்கான கிடங்குகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்து உள்ளார். மேலும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பூசிக்கான ஒத்திகை நடைபெறும் என்றும் சென்னை உள்ளிட்ட 4 இடங்களில் கொரோனா தடுப்பு மருந்து சேமிப்பு கிடங்கு வைக்கப்பட்டு உள்ளதாகவும் அதில் மொத்தம் 2 கோடி தடுப்பூசி பதப்படுத்தி வைக்கும் வசதி ஏற்படுத்தப் பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். இதனால் கொரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கிய அடுத்த நாளில் இருந்தே பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசியை விநியோகிக்க தமிழக அரசு தயாராக உள்ளதாகவும் அவர் நம்பிக்கை அளித்து உள்ளார்.