கொரோனா பேரிடர் காலத்திலும் வேலையின்மை சதவீதத்தை குறைத்து தமிழக அரசு சாதனை!!!
- IndiaGlitz, [Monday,August 24 2020]
கொரோனா ஊரடங்கு காரணமாக இந்தியா முழுவதும் கடுமையான வேலைவாய்ப்பின்மை நிலவுகிறது. ஆனால் தமிழகத்தில் இதற்கு நேர்மாறாக வேலைவாய்ப்பின்மை மிகவும் குறைந்து பல்வேறு முதலீட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப் பட்டுள்ளன. பேரிடர் காலத்தில் நிலவும் பொருளாதார இழப்பீட்டை குறைக்கவும் வேலைவாய்ப்பின்மையை போக்கவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு செயல்திட்டங்களை அமல்படுத்தியுள்ளார். அச்செயல்திட்டங்களால் இத்தகைய முன்னேற்றம் சாத்தியமானது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தவும் பாதிக்கப் பட்டவர்களை வைரஸ் தாக்குதலில் இருந்து மீட்கவும் அரசு சார்பில் பல்வேறு துரிதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் தமிழகத்தின் பொருளாதாரம் சரிந்து விடாமல் இருக்கவும் தொழில்சார்ந்த முதலீடுகளை ஈர்க்கும் விதமாகவும் செயல்திட்டங்கள் வகுக்கப்பட்டு அதன்மூலம் ரூ.35,500 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன என்பதும் சுட்டிக்காட்டத் தக்கது. இத்தகைய தொழில்சார் முதலீடுகளால் வேலையில்லாமல் தவித்துவரும் தமிழக இளைஞர்கள் வேலைவாய்ப்பின்மை குறைபாட்டை சரிகட்ட முடிந்தது என்றும் அரசு சார்பில் தகவல் கூறப்படுகிறது.
மேலும், வேலையில்லாமல் தவித்துவரும் இளைஞர்கள் பற்றிய தவல்களைத் தெரிந்துகொள்ள தனியாக ஒரு இணையதளமும் அரசு சார்பில் ஏற்படுத்தப் பட்டுள்ளது. அப்படி கிடைக்கப்பெறுகின்ற தகவல்களை வைத்து குறைபாட்டை போக்கவும் பல்வேறு செயல்திட்டங்கள் மேற்கொள்ளப் பட்டன. தற்போது அதிமுகவின் வடதமிழக ஐடி விங் செகரெட்டரி கோவை சத்தியன் அவர்கள் தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்பின்மை குறித்த தரவுகளை வெளியிட்டுள்ளார்.
அதில், தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதத்தில் வேலைவாய்ப்பின்மை சதவீதம் 5.7% ஆக இருந்தது. அடுத்து கொரோனாவின் தீவிரத்தால் ஏப்ரல் மாதத்தில் 49.8% ஆக உயர்ந்தது. இந்த விகிதத்தை ஜுலை மாதத்தில் 8.1% ஆக தமிழக அரசு குறைத்து பெரும் சாதனை படைத்துள்ளது எனத் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார். கொரோனா பேரிடர் காலத்தில் இந்திய அளவில் அதிக முதலீடுகளை ஈர்த்த மாநிலமாகவும் தமிழகம் சிறந்து விளங்குகிறது. இந்திய அளவில் அதிக கொரோனா பரிசோதனையை மேற்கொள்ளும் மாநிலமாகவும் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது. தற்போது வேலைவாய்ப்பின்மை அளவை துரிதமாகக் குறைத்து அதிலும் பெரும் சாதனை படைத்து இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.