முதல்வர்-சபாநாயகர் அவசர சந்திப்பு: 9 மாவட்ட எம்.எல்.ஏக்களுடனும் திடீர் ஆலோசனை

  • IndiaGlitz, [Tuesday,June 06 2017]

ஏற்கனவே அதிமுக, ஓபிஎஸ் அணி மற்றும் சசிகலா அணி என இரண்டாக உடைந்திருக்கும் நிலையில் இன்று முதல் தினகரன் அணி என்ற புதிய அணி உருவாகி அதற்கு தற்போது 21 எம்.எல்.ஏக்கள் ஆதரவும் கொடுத்துள்ளனர். இந்த நிலையில் தற்போதைய அரசியல் குழப்பங்கள் குறித்து ஆலோசனை செய்ய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சற்று முன்னர் சபாநாயகர் தனபாலை சந்தித்து பேசினார்.
இப்போதுள்ள நிலையில் ஆட்சி கவிழும் நிலை இருப்பதால் முதல்வர்-சபாநாயகர் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதுமட்டுமின்றி இன்று 9 மாவட்ட அதிமுக எம்.எல்.ஏக்களுடனும் முதல்வர் பழனிச்சாமி முக்கிய ஆலோசனை செய்கிறார். இந்த ஆலோசனைக்கு பின்னர் கட்சி மற்றும் ஆட்சி குறித்து முக்கிய முடிவை முதல்வர் எடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுகவை மீண்டும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என்று தினகரனும், சசிகலா, தினகரன் குடும்பத்தை ஒதுக்கி வைக்க வேண்டும் என்று எடுத்த முடிவில் உறுதியாக இருக்கும் முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கும் இடையேயான இந்த போட்டி எதில் முடியும் என்று தெரியாத நிலைதான் இப்போதைக்கு உள்ளது.
இருப்பினும் வரும் ஜூலையில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் வரை இப்போதைய அரசுக்கு ஆபத்து இருக்காது என்றே கருதப்படுகிறது.