மேலும் 500 மதுக்கடைகள் மூடல். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் முதல் உத்தரவு
- IndiaGlitz, [Monday,February 20 2017]
தமிழக முதல்வராக கடந்த வாரம் பதவியேற்று சர்ச்சைக்குரிய வகையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதாக கூறப்படும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சற்று முன்னர் தலைமைச்செயலகம் வந்தார்.
தலைமைச்செயலகம் வந்தவுடன் முதல் கையெழுத்தாக தமிழகத்தில் மேலும் 500 டாஸ்மாக் மதுக்கடைகளை மூடும் உத்தரவில் அவர் கையெழுத்திட்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர், 'உழைக்கும் மகளிருக்கு இருசக்கரம் வாங்க 50% மானியம், ஏழை கர்ப்பிணி பெண்களுக்கு மகப்பேறு நிதியுதவி ரூ.12 ஆயிரத்தில் இருந்து ரூ.18 ஆயிரமாக உயர்வு, மீனவர்களுக்கு தலா ரூ.1,70,000 மதிப்பிலான 5,000 வீடுகள் கட்டித்தரப்படும் ஆகிய அறிவிப்புகளை வெளியிட்டார். மேலும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை இருமடங்கு உயர்த்துவதாக அறிவித்த முதல்வர், இதற்காக ஆண்டிற்கு ரூ.31 கோடி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளதாக தெரிவித்தார்.
முன்னதாக முதல்முறையாக முதல்வராக தலைமைச்செயலகம் வந்த எடப்பட்டி பழனிச்சாமியை தலைமைச்செயலாளர் கிரிஜா, காவல் ஆணையர் ஜார்ஜ், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை எம்.பி., மற்றும் அமைச்சர்கள் வரவேற்பு அளித்தனர்