டெல்லியில் இருந்து முதல்வர் ஓபிஎஸ் சென்னை திரும்பாதது ஏன்? புதிய தகவல்
- IndiaGlitz, [Thursday,January 19 2017]
ஜல்லிக்கட்டு நடத்த சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ள நிலையில் மத்திய அரசு அவசர சட்டம் இயற்ற வேண்டும் என்பதை வலியுறுத்த நேற்றிரவு பிரதமர் மோடியை சந்திக்க டெல்லி சென்ற முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று அவரை சந்தித்து தமிழகத்தின் கோரிக்கையை வலியுறுத்தினார். ஆனால் பிரதமர் சுப்ரீம் கோர்ட்டில் ஜல்லிக்கட்டு குறித்த வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி அவசர சட்டம் இயற்ற மறுத்துவிட்டார்.
இந்நிலையில் இன்று மாலை முதல்வர் ஓபிஎஸ் சென்னை திரும்புவார் என்று கூறப்பட்ட நிலையில் அவர் இன்னும் திரும்பவில்லை. டெல்லியில் முதல்வர் ஓபிஎஸ் மூத்த வழக்கறிஞர்களுடன் ஆலோசனை செய்து வருவதாகவும் ஜல்லிக்கட்டை உடனே நடத்த தமிழக அரசே அவசர சட்டம் இயற்றக்கூடிய வாய்ப்பு குறித்து ஆலோசனை நடத்தி வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
ஒருவேளை அவசர சட்டம் இயற்றி, ஜல்லிக்கட்டை நடத்தினால் அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள், அந்த விளைவுகளை சந்திப்பது எப்படி என்பது குறித்தும், அந்த சமயத்தில் மத்திய அரசிடம் பெறும் உதவிகள் குறித்தும் முதல்வர் டெல்லியில் வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து வருவதாகவும், அவர் சென்னை திரும்பும்போது அதிரடி முடிவுடன் தான் வருவார் என்றும் கூறப்படுகிறது.
ஏற்கனவே டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஓபிஎஸ் தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகளை பொறுத்திருந்து பாருங்கள் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. .