கமல் நன்றி சொல்ல வேண்டியது குமாரசாமிக்கு அல்ல: தமிழிசை

  • IndiaGlitz, [Saturday,June 16 2018]

கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி காவிரியில் இருந்து தண்ணீரை திறந்துவிடாத காரணத்தால் தமிழக விவசாயிகளின் குறுவை சாகுபடிக்கு தேவையான தண்ணீரை மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12ஆம் தேதி தமிழக அரசு திறந்துவிட முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் கவலையில் இருந்தனர்.

இந்த நிலையில் கடந்த வாரம் நடிகர் கமல்ஹாசன் பெங்களூர் சென்று கர்நாடக முதல்வருடன் காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிடுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. கர்நாடகத்தில் கனமழை பெய்து கபினி அணை நிரம்பியதால் கர்நாடகம் தண்ணீரை திறந்துவிட்டதாக கூறப்பட்டாலும் தண்ணீர் திறந்துவிட்ட கர்நாடக முதல்வருக்கு கமல்ஹாசன் தனது டுவிட்டரில் நேற்று நன்றி தெரிவித்திருந்தார். மேலும் காவிரி மேலாண்மை ஆணையம் செயல்பட தொடங்கிய பிறகு, இரு மாநில நட்பால் அடைக்கப்பட்டிருக்கும் பல கதவுகள் திறக்கப்படும் என்று தான் நம்புவதாகவும் கமல் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் கமல்ஹாசனின் இந்த கருத்து குறித்து பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் கூறியபோது, 'கர்நாடகத்தை ஆள்பவர் தண்ணீர் கொடுக்கவில்லை. ஆண்டவன் (ரங்கநாதர்) கொண்டு வந்த மழையால்தான் தண்ணீர் வந்திருக்கிறது. கமல் நன்றி சொல்ல வேண்டியது குமாரசாமிக்கு அல்ல! நம்ம ஊர் சாமிக்குத்தான்....என்று கூறியுள்ளார். தமிழிசையின் இந்த டுவீட்டுக்கு வழக்கம்போல் ஆதரவையும் எதிர்ப்பையும் டுவிட்டர் பயனாளிகள் தெரிவித்து வருகின்றனர்.