கமல் மன்னிப்பு கேட்க வேண்டிய தவறுகள் நிறைய உள்ளன: தமிழிசை
- IndiaGlitz, [Saturday,October 21 2017]
கடந்த சில மாதங்களாகவே பாஜகவினர் அரசியல் கட்சிகளை எதிர்த்து அரசியல் செய்யாமல் நடிகர்களை எதிர்த்தே அரசியல் செய்து வருகின்றனர். குறிப்பாக கமல்ஹாசன், விஜய்யை கிட்டத்தட்ட அனைத்து பாஜக தமிழக தலைவர்களும் விமர்சனம் செய்துவிட்டனர்.
இந்த நிலையில் கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் கமல் மற்றும் விஜய்யின் 'மெர்சல்' குறித்து பேசியுள்ளார். 50 ஆண்டுகளாக திரைப்படத்துறையில் இருந்த கமல்ஹாசன் தற்போது திரைப்படத்துறை புறக்கணித்த பிறகு டுவிட்டரில் மட்டும் அரசியல் செய்வதாகவும், டுவிட்டர் மற்றும் இணையதளத்தில் மட்டும் அரசியல் செய்ய முடியாது என்றும் கூறியுள்ளார்.
மேலும் ஜிஎஸ்டிக்கு முதலில் ஆதரவு தெரிவித்துவிட்டு தற்போது மன்னிப்பு கேட்கும் கமல், இன்னும் நிறைய தவறுகளுக்கு மன்னிப்பு கேட்க வேண்டிய நிலை ஏற்படும்' என்றும் அவர் தெரிவித்தார்.
மெர்சல் படத்துக்கு ஒரே நாளில் ரூ.33 கோடி எப்படி வசூல் கிடைத்தது என்று கேள்வி எழுப்பிய தமிழிசை, ரூ.200 டிக்கெட்டை ரூ.2 ஆயிரத்துக்கு விற்பது ஊழலாக தெரியவில்லையா? என்று விஜய் குறித்தும் அவர் விமர்சனம் செய்துள்ளார்.
தமிழிசையின் இந்த கருத்துக்கு கமல் மற்றும் விஜய் ரசிகர்கள் சமூக இணையதளங்களில் பதிலடி கொடுத்து வருகின்றனர்.