என்றும் இளமையாக இருக்க நம்ம ஊரு ஊட்டச்சத்து உணவு… தமிழிசை சௌந்திரராஜன் பரிந்துரை!!!

  • IndiaGlitz, [Monday,September 07 2020]

 

கடந்த மாதம் மன் கி பாத் நிகழ்ச்சிக்காக நாட்டு மக்களுடன் உரையாடிய பிரதமர் மோடி செப்டம்பர் மாதத்தை ஊட்டச்சத்து மாதமாக கடைப்பிடிக்க அழைப்பு விடுத்தார். அதன்படி ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த கணொலி மூலம் கலந்துரையாடல், கருத்தரங்குகள் போன்ற நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் ஊட்டச்சத்து குறித்த கருத்துகளை தலைவர்களும் பரிந்துரை செய்து வருகின்றனர்.

இந்தியாவில் போஷன் அபியான் எனப்படும் ஊட்டச்சத்து இயக்கம் பிரதமரின் முழுமையான ஊட்டச்த்துக்கான திட்டமாக கடந்த 2018 மார்ச் மாதம் தொடங்கப்பட்டது. மேலும் பிரதமர் மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசும்போது “குழந்தைகளிடையே குறிப்பாக பெண் குழந்தைகளிடம் காணப்படும் ஊட்டச்சத்து பற்றாக்குறையை போக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்” என வலியுறுத்தி இருந்தார். அந்த வகையில் தெலுங்கானா மாநில ஆளுநராகப் பதவி வகித்துவரும் தமிழிசை சௌந்தரராஜன் நம்ம ஊரு கடலை மிட்டாயில் அதிக ஊட்டச்சத்து இருக்கிறது என வீடியோ ஒன்றை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். இவர் ஒரு மருத்துவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழிசை வெளியிட்ட வீடியோவில் “கடலையையும் வெல்லப்பாகையும் ஒன்றாக இணைத்து செய்யக்கூடியதுதான் கடலை மிட்டாய். வெல்லப்பாகில் உள்ள நன்மைகளும் வேர்க்கடலையில் உள்ள நன்மைகளும் சேர்த்து அபரிதமான ஊட்டச்சத்தை வழங்குகிறது. இது எளிதாக கிடைப்பதினால் நாம் இதன் அருமையை உணராமல் உள்ளோமா என்று எனக்குத் தெரியவில்லை’‘ என்று கூறியிருக்கிறார்.

மேலும் வெல்லப்பாகில் அதிக ஆண்டி-ஆக்சிடன் உள்ளது. இது நமது உடலை இளமையாக வைத்திருக்க உதவுகிறது. வேர்க்கடலையில் உள்ள போலிக் ஆசிட் நமது இதயத்தை பாதுகாக்கிறது. அதேபோன்று இதில் உள்ள பைட்டோ பீனால்ஸ் நமது நரம்பு மண்டலத்தை பாதுகாக்கிறது. மேலும் நிலக்கடலை நமது உடலில் தீமை செய்யும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது. மறதி நோயிடமிருந்து கடலை மிட்டாய் நம்மை பாதுகாக்கிறது என்பதை உங்களால் நம்ப முடிகிறதா? விட்டமின் இ, துத்தநாகம், மெக்னிசியம் ஆகியவை நிலக்கடலையில் நிறைந்திருப்பதால் நமது தோல் பளபளப்பாக இருக்க உதவுகிறது.

அதைத்தவிர குழந்தைகளின் வளர்ச்சிக்குத் தேவையான அமினோ அமிலம் இதில் இருக்கிறது. இவ்வளவு நன்மைகள் தரும் உணவுப் பொருளை நாம் உண்டு மகிழ்வோம். சத்துணவைப் போல அனைத்து பள்ளிகளிலும் குழந்தைகளுக்கு கடலை மிட்டாயைக் கொடுக்கலாம் என்பது என்னுடைய யோசனை” என்றும் தெரிவித்து இருக்கிறார்.