கமல் மக்களுக்கு என்ன செய்தார்? அரசியலுக்கு வர நினைப்பது ஏன்? தமிழிசை கேள்வி

  • IndiaGlitz, [Wednesday,July 19 2017]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதாக சூசகமாக அறிவித்தபோது அரசியல்வாதிகளில் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். தற்போது கமல்ஹாசனின் அரசியல் வருகையையும் அவர்கள் எதிர்க்க தயாராகிவிட்டனர். தற்போதைய அரசியல் களத்தில் பல தியாகிகள் இருப்பதாகவும், மக்களுக்கு எதுவுமே செய்யாத கமல்ஹாசன் அரசியலுக்கு வர துடிப்பது ஏன்? என்றும் பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சற்று முன்னர் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழிசை செளந்திரராஜன் கூறியதாவது: கமல் இதுவரை மக்களுக்கு என்ன செய்தார். அவர் என்ன சமுதாய பார்வையோடு இருந்தார்?. மக்களுக்கான பிரச்னையின் போது எவ்வளவு இறங்கி போராடினார்கள்?, மக்களுக்கு ஆதரவாக இருந்தாரா? என்பதை எல்லாம் பார்க்க வேண்டியது முக்கியம்.

கமல் அவர்களின் படத்தை கூட மக்கள் பணத்தை கொடுத்து, டிக்கெட் வாங்கி தான் பார்க்கின்றனர். அவர் கலைச் சேவை செய்கின்றேன் என இலவசமாக படத்தை வெளியிடவில்லை. அதனால் யார் அரசியல் தலைவர்களுக்கு எதிரான கருத்தை தெரிவித்தாலும் நான் அதை எதிர்க்க மாட்டேன். ஆனால் அரசியலில் பல தியாகத்தை செய்து, போராடிக்கொண்டிருக்கு பல தலைவர்கள் இருக்கின்றனர். நீங்கள் உங்கள் துறையில் பிரபலமாக இருந்துவிட்டு, இன்று உங்களுக்கு ஒரு அங்கிகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக அரசியலுக்கு வர நினைப்பது ஏன் என்பது என் கேள்வி.

இவ்வாறு தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார்.