நிலவேம்பு கசாயம்: கமல் கருத்துக்கு தமிழிசை, விஜயபாஸ்கர் கண்டனம்
- IndiaGlitz, [Thursday,October 19 2017]
டெங்கு காய்ச்சலுக்கு அளிக்கப்பட்டு வரும் நிலவேம்பு கசாயத்தை தனது ரசிகர்கள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டாம் என்றும் இந்த கசாயம் குறித்த ஆராய்ச்சிக்கு பின்னர் இந்த பணியை தொடரலாம், அதுவரை பொறுமை காப்போம்' என்றும் நடிகர் கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் நேற்று தெரிவித்திருந்தார்.
கமல்ஹாசனின் இந்த கருத்துக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். நேற்று தமிழிசை செளந்திரராஜன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது: நான் அலோபதி மருத்துவ பணியில் உள்ள டாக்டர். நாங்களே நிலவேம்பு குடிநீரை எதிர்க்கவில்லை. நிலவேம்பு குடிநீரின் மருத்துவ தன்மை, அனுபவம் மற்றும் ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட்டது. டெங்குவால் பாதிக்கப்பட்டவர்கள் உட்கொள்வது தவறில்லை. இந்த விஷயத்தில், கமல் போன்ற பிரபலங்கள், மக்கள் மத்தியில் தேவையற்ற பீதியை கிளப்ப கூடாது' என்று கூறினார்.
அதேபோல் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் இதுகுறித்து கூறியபோது, 'நிலவேம்பு கஷாயம் குடித்தால் பக்க விளைவு ஏற்படும் என பரவும் தகவல்கள் தவறானவை. நிலவேம்பு குடிநீர் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது என சென்னையில் உள்ள 'கிங் இன்ஸ்டிடியூட்' சான்றிதழ் வழங்கியுள்ளது. மேலும் நிலவேம்பு குடிநீர் குறித்து, சமூக வலைதளங்கில் தவறான தகவல் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெரிவித்துள்ளார்.