என்னுடைய அரசியல் வாழ்வு ரஜினி ஆதரவோடு முடிந்துவிடும்: அரசியல் கட்சி தலைவர்
- IndiaGlitz, [Wednesday,July 29 2020]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி தான் அரசியலில் குதிக்க இருப்பதாகவும், தான் ஆரம்பிக்க இருக்கும் அரசியல் கட்சி, வரும் சட்டமன்ற பொதுத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடும் என்றும் தெரிவித்திருந்தார்.
இதனை அடுத்து ’ரஜினி மக்கள் மன்றம்’ என்ற அமைப்பை ஆரம்பித்து தமிழகம் முழுவதும் அதன் நிர்வாகிகளை நியமனம் செய்து வந்தார். இந்த அமைப்பு தான் அரசியல் கட்சியாக உருவாகவிருப்பதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் ரஜினிகாந்த் அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ரஜினிக்கு அரசியல் ஆலோசனை கூறி வரும் தலைவர்களில் ஒருவரான காந்திய அரசியல் இயக்கம் தலைவர் தமிழருவி மணியன் திடீரென ரஜினிக்கு ஆதரவு தரும் நிலையில் இருந்து பின்வாங்கி விட்டதாக செய்திகள் வெளியானது.
இது குறித்து சமீபத்தில் பேட்டியளித்த தமிழருவி மணியன், ‘ரஜினி ஆதரவு நிலைப்பாட்டில் இருந்து விலகியதாக வெளிவரும் தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் தனது அரசியல் வாழ்வு ரஜினியை ஆதரிப்பதோடு முடிந்துவிடும் என்றும் ரஜினியால் மட்டுமே தமிழகத்திற்கு ஒரு நல்ல மாற்றத்தை தர முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ரஜினி ஆதரவு நிலையிலிருந்து திடீரென தமிழருவி மணியன் மாறியதாக வெளிவந்துள்ள செய்திக்கு அவரே இந்த பேட்டியின் மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.