கமல் செய்த மாபெரும் தவறு: தமிழருவி மணியன்

  • IndiaGlitz, [Sunday,June 10 2018]

நடிகரும் அரசியல் கட்சி தலைவருமான கமல்ஹாசன் சமீபத்தில் கர்நாடக முதல்வர் குமாரசாமி அவர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது தான் காவிரி பிரச்சனை குறித்து அவரிடம் ஆலோசித்ததாகவும் பேட்டி அளித்தார். கமலின் இந்த சந்திப்பை அரசியல் தலைவர்கள் பலர் விமர்சனம் செய்து வந்தனர். காவிரி பிரச்சனை சுப்ரீம் கோர்ட்டால் முடிவுக்கு வந்த பின்னர் கமல்ஹாசனின் இந்த சந்திப்பு தேவையற்றது என்று அரசியல் தலைவர்களால் கூறப்பட்டது.

இந்த நிலையில் காந்திய மக்கள் கட்சியின் தலைவரும் ரஜினியின் ஆதரவாளருமான தமிழருவி மணியன் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், கமல், குமாரசாமியை சந்தித்தது மாபெரும் தவறு என்று கூறியுள்ளார். இந்த தவறை அவர் அறியாமல் செய்திருந்தாலும் தவறு தவறுதான் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: காவிரி என்பது எங்கள் உரிமை. அந்த உரிமையை நீதிமன்றம் மூலம் பெற்று காவிரி மேலாண்மை ஆணையமும் அமைக்கப்பட்டுவிட்டது. இனிமேல் எந்த மாநில முதல்வருக்கோ அல்லது மத்திய அரசுக்கோ தண்ணீர் திறந்துவிடும் உரிமை இல்லை. இந்த நிலையில் கமல், குமாரசாமியை சந்தித்து தண்ணீர் விடுங்கள் என்று கூறுவது அவர் செய்த மாபெரும் தவறு. மேலும் குமாரசாமியும் அவரது தந்தை தேவகெளடாவும் தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கொடுக்க முடியாது என்று கூறியவர்கள். அவர்களிடம் போய் கமல் எப்படி பேச்சுவார்த்தை  நடத்தலாம்' என்று தமிழருவி மணியன் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.