ரஜினி அரசியலுக்கு வரவே மாட்டேன் என்று சொல்லவில்லை: தமிழருவி மணியன்
- IndiaGlitz, [Tuesday,February 02 2021]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தான் எப்போதும் அரசியலில் அடியெடுத்து வைக்க மாட்டேன் என்று அறிவிக்கவில்லை என்றும் நாளையே அவர் அரசியலில் அடியெடுத்து வைக்க வாய்ப்பு இருப்பதாகவும் தமிழருவி மணியன் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அரசியலுக்கு வரப் போவதாகவும் அரசியல் கட்சி தொடங்கப் போவதாகவும் வரும் சட்டமன்ற தேர்தலில் அவரது கட்சி போட்டியிடும் என்றும் கூறப்பட்டது.
அதற்கான பணிகளும் நடந்து வந்த நிலையில் திடீரென தனது உடல்நிலையை காரணம் காட்டி கட்சி ஆரம்பிக்க போவதில்லை என்றும் அரசியலில் ஈடுபடப் போவதில்லை என்றும் ரஜினி தெரிவித்தார். இந்த நிலையில் ரஜினியின் கட்சிக்கு ஆலோசகராக இருந்த காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் அவர்கள் தற்போது ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் தான் எப்போதும் அரசியலில் அடியெடுத்து வைக்கப் போவதில்லை என ரஜினி அறிவிக்கவில்லை என்றும் நாளையே அவர் அரசியலுக்கு வர முடிவு செய்தால் காந்திய மக்கள் கட்சி அவருக்கு உறுதுணையாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காந்திய மக்கள் இயக்கத்தில் ரஜினி மக்கள் மன்றத்தைச் சார்ந்த பலர் இணைந்து பணியாற்ற விரும்பி என்னுடன் தொடர்பு கொள்கின்றனர். ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ளவர்களுக்கு அன்புடன் ஒன்றை உணர்த்த விரும்புகிறேன்.
பாழ்பட்ட அரசியலைப் பழுது பார்க்கவே ரஜினி அரசியல் உலகில் அடியெடுத்து வைக்க முயன்றார். காலச்சூழல் அவருடைய கனவை நனவாக்க இடம் தாராத நிலையில் இப்போது அவர் கட்சி தொடங்குவதை தவித்திருக்கிறார். நான் எப்போதும் அரசியலில் அடியெடுத்து வைக்கப்போவதில்லை என்று அவர் அறிவிக்கவில்லை.
ரஜினி மக்கள் மன்றத்தை அவர் கலைத்துவிடவுமில்லை. ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து ஆள் பிடிக்கும் அநாகரிக அரசியலை அடியோடு வெறுக்கிறேன். காந்திய மக்கள் இயக்கம் இந்த சந்தர்ப்பவாத செயலில் மறந்தும் ஈடுபடாது என்று உறுதிபட அறிவிக்கிறேன். காந்திய மக்கள் இயக்கம் ரஜினி மக்கள் மன்றத்தின் சகோதர அமைப்பாக தொடர்ந்து செயல்படும். நாளையே ரஜினி அரசியலுக்கு வந்தாலும் காந்திய மக்கள் இயக்கம் அவருடன் சேர்ந்தே பயணிக்கும்’ இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.