நான் இறந்தபிறகு என் உடலையாவது சொந்த ஊருக்கு எடுத்து செல்லுங்கள்: துபாயில் தவிக்கும் தமிழ் இளைஞர்
Send us your feedback to audioarticles@vaarta.com
நான் இறந்த பிறகாவது என்னுடைய உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் சொல்லுங்கள் என்று துபாயில் தவித்து வரும் தமிழ் இளைஞர் ஒருவர் வீடியோ ஒன்றை சமூக தளத்தில் வெளியிட்டு இருப்பது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் தேனி மாவட்டம் போடி என்ற பகுதியைச் சேர்ந்த கணேஷ் குமார் என்ற இளைஞர் கடந்த சில மாதங்களுக்கு முன் துபாய்க்கு வேலை தேடி சென்றார். ஆனால் அங்கு அவருக்கு வேலை கிடைக்காததால் நண்பர்களின் அறையில் தங்கி இருந்துள்ளார். இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் அவரால் சொந்த நாட்டிற்கும் திரும்பி வர முடியவில்லை.
இந்த நிலையில் தற்போது அவர் மஞ்சள் காமாலை மற்றும் புற்றுநோயால் அவதிப்படுவதாகவும் தன்னால் நிற்க முடியவில்லை என்றும் சாப்பிட முடியவில்லை என்றும் வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளார். தனது நோய் குறித்த மருத்துவ அறிக்கைகளை எல்லாம் காண்பித்து இந்திய தூதரகத்தில் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தும், தன்னை இந்தியாவுக்கு அனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் என்னை எப்படியாவது என்னுடைய அம்மாவிடம் கொண்டு போய் சேர்த்து விட்டால் அவர் என்னைப் பார்த்துக் கொள்வார் என்று அவர் கண்ணீருடன் கூறியுள்ளார்.
மேலும் ஒரு வேளை நான் இங்கேயே இறந்துவிட்டால் என்னுடைய உடலையாவது என்னுடைய சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லுங்கள் என்று அவர் பரிதாபமாக அந்த வீடியோவில் கூறியிருப்பது கல் நெஞ்சையும் கரைய வைக்கும் வகையில் உள்ளது. இந்த வீடியோவை பார்த்த அவருடைய பெற்றோர் அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர். தனது மகனை துபாயிலிருந்து எப்படியாவது சொந்த ஊருக்கு அழைத்து வர ஏற்பாடு செய்யும்படி அவர்கள் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தகுந்த நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments