எழுத்தாளர் அசோகமித்ரன் மறைவு. கமல் உள்பட பிரபலங்கள் இரங்கல்
- IndiaGlitz, [Friday,March 24 2017]
சாகித்ய அகாடமி விருது பெற்ற பிரபல எழுத்தாளர் அசோகமித்ரனின் மறைவு தமிழ் எழுத்துலகம் மட்டுமின்றி திரையுலகத்தையும் அதிர்ச்சி அளித்துள்ளது. கமல்ஹாசன் உள்பட பல திரையுலகினர்களும் அசோகமித்ரனின் எழுத்துக்கு வாசககர்களாக இருந்தனர்.
அசோகமித்ரன் மறைவு குறித்து உலக நாயகன் கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது: திரு. அசோகமித்ரனின் எழுத்து அவர் காலமும் கடந்து வாழும். அவரை வாசித்து நேசித்து சந்தித்த பெருமை பெற்றவன் நான் .நனறி அமரர் அனந்துவிற்கு' என்று குறிப்பிட்டுள்ளார்
பிரபல எழுத்தாளரும் திரைக்கதை ஆசிரியருமான எஸ்.ராமகிருஷ்ணன் தனது இரங்கல் அறிக்கையில் கூறியதாவது: சென்னை நகரின் வாழ்க்கையை எழுத்தில் பதிவு செய்ததில் அவருக்கு நிகர் எவருமில்லை. சினிமாவின் மறுபக்கம் பற்றி அவர் எழுதிய 'கரைந்த நிழல்கள்' நாவல் தமிழின் மகத்தான படைப்பு. ஒற்றன், தண்ணீர், மானசரோவர் எனத் தனது முக்கிய நாவல்களின் வழியே தமிழ் புனைவெழுத்தின் உச்சங்களை அவர் படைத்துக் காட்டியுள்ளார். ஹாலிவுட் திரைப்படங்கள் குறித்தும், அமெரிக்க எழுத்தாளர்கள் குறித்தும் அவர் எழுதிய கட்டுரைகள் அபாரமானவை. எளிமையும் கலைநேர்த்தியும் மிக்க சிறுகதைகளை எழுதியவர் அசோகமித்ரன். அவரது நகைச்சுவை உணர்வு அபாரமானது. தனது கஷ்டங்களை, வேதனைகளைக் கலையாக மாற்றத் தெரிந்த அற்புதமான படைப்பாளி. அவரது மறைவு தமிழ் இலக்கியத்திற்குப் பேரிழப்பாகும்' என்று கூறியுள்ளார்
பிரபல எழுத்தாளரும் வசனகர்த்தாவுமான ஜெயமோகன் அசோகமித்ரன் மறைவு குறித்த தனது இரங்கல் செய்தியில் கூறியதாவது: நவீனத்தமிழின் மேதைகளில் ஒருவர் இன்று மறைந்தார். அஞ்சலி என்பதற்கு அப்பால் சொல் ஒன்றுமில்லை இப்போது' என்று கூறியுள்ளார்.
அசோகமித்ரன் மறைவு குறித்து பிரபல எழுத்தாளர் கலாப்ரியன் கூறியதாவது: “தமிழின் உன்னத எழுத்தாளர்களில் இன்னொருவர் மறைந்து விட்டார். மிகச் சிறப்பான உரைநடைக்கு சொந்தக்காரர். நேரில் பழகுவதற்கும் அருமையான மனிதர்.புதிய கலைஞர்களை ஊக்கப்படுத்துவதில் எப்போதும் ஆர்வம் காட்டுபவர். அவர் மறைவு நமக்கு இழப்பு. அவர் நினைவுகள் நம்மை வளப்படுத்தும்.