சாப்பாட்டுக்கே வழியில்லை, உதவி செய்யுங்கள்: தமிழ் சினிமாவின் வில்லன் நடிகர் கோரிக்கை

 

சாப்பாட்டுக்கும் மருந்து மாத்திரைக்கும் கூட தன்னிடம் பணம் இல்லை என்றும், தயவு செய்து தனக்கு உதவி செய்யுங்கள் என்றும் தமிழ் பட வில்லன் நடிகர் ஒருவர் கோரிக்கை விடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த நான்கு மாதங்களாக திரைப்பட படப்பிடிப்பு நடக்கவில்லை என்பதால் சின்ன சின்ன நடிகர்கள் பெரும் கஷ்டத்தில் உள்ளனர். படப்பிடிப்பு இருந்தால் மட்டுமே சிறு நடிகர்களின் வாழ்வாதாரம் காப்பாற்றபடும் என்பதால் கடந்த நான்கு மாதங்களாக அவர்களுக்கு எந்தவித வருமானமும் இன்றி கஷ்டத்தில் உள்ளனர். பெரிய நடிகர்கள் சிலர் ஒரு சில உதவிகளை செய்து வந்தாலும் அந்த உதவிகள் போதுமானதாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கே.பாக்யராஜ் நடித்து இயக்கிய ‘தூரல் நின்னு போச்சு’ படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் மண்வாசனை, கிழக்குசீமையிலே, சமீபத்தில் வெளிவந்த ’கைதி’, ‘சங்கத்தமிழன்’ உள்பட பல திரைப்படங்களில் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்தவர் நடிகர் சூர்யகாந்த். இவர் தற்போது படப்பிடிப்பு இல்லாத காரணத்தினால் பொருளாதாரரீதியாக மிகவும் கஷ்டமாக கஷ்டப்படுவதாகவும், சர்க்கரை நோய் உள்ளிட்ட பாதிப்பு தனக்கு இருப்பதாகவும் மாதமொன்றுக்கு மருந்து மாத்திரைகள் வாங்கவே ரூ.1500 செலவாகிறது என்றும் கூறியுள்ளார். மருந்து மாத்திரை வாங்கவும் சாப்பாட்டுக்கு கூட பணம் இல்லாமல் இருப்பதாகவும் தயவுசெய்து எனக்கு உதவி செய்யுங்கள் என்றும் நடிகர் சூர்யகாந்த் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.