கலைஞர் கருணாநிதிக்கு மிக நெருக்கமான பிரபல கவிஞர் காலமானார்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல தமிழ் கவிஞரும், திமுக தலைவர் கருணாநிதி அவர்களுக்கு மிக நெருக்கமானவருமான கவிக்கோ அப்துல்ரகுமான் இன்று அதிகாலை சென்னையில் காலமானார். அவருக்கு வயது 70.
கவிக்கோ அப்துல்ரகுமான் கடந்த சில நாட்களாக உடல்நலம் இன்றி சிகிச்சையில் இருந்ததாகவும், இன்று அதிகாலை ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக அவரது உயிர் பிரிந்ததாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். அப்துல்ரகுமானின் மறைவிற்கு தமிழ் ஆர்வலர்கள், அரசியல்வாதிகள், திரைப்பட துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்
தமிழ் மீது பெரும் காதல் கொண்ட கவிக்கோ அப்துல் ரகுமான், மதுரையில் கடந்த 1937ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் தேதி பிறந்தார். இவருடைய குடும்பத்தினர் உருது கவிஞர்களாக இருந்துள்ளனர். அதனால் அவரும் சிறு வயது முதலே கவிதைகள் எழுதுவதில் ஆர்வம் கொண்டிருந்தார்
இஸ்லாமிய கல்லூரி ஒன்றில் 20 ஆண்டுகள் தமிழ்த்துறையில் பணியாற்றிய அப்துல் ரகுமான், தமிழ் மட்டுமின்றி ஆங்கிலம், அரபி, உருது, பாரசீகம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் புலமை பெற்றிருந்தார். கடந்த 1974ஆம் ஆண்டு இவருடைய முதல் கவிதைத்தொகுப்பு 'பால்வீதி' என்ற பெயரில் வெளிவந்தது. 1999ஆம் ஆண்டு அப்துல்ரகுமான் எழுதிய `ஆலாபனை` என்ற கவிதைத் தொகுப்பு சாகித்ய அகாடமி விருதை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் பாரதிதாசன் விருது, கலைமாமணி, கம்பர் விருது, உமறுப்புலவர் விருது ஆகிய பல விருதுகளை பெற்றுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான அப்துல்ரகுமான் தி.மு.க ஆட்சி காலத்தில் வக்பு வாரியத் தலைவராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments