உக்ரைன் ராணுவத்தில் தமிழக மாணவரா? அதிர்ச்சி தகவல்

  • IndiaGlitz, [Tuesday,March 08 2022]

உக்ரைன் ராணுவத்தில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் இணைந்திருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களாக உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் நடைபெற்று வரும் நிலையில் உக்ரைனை காப்பாற்ற அந்நாட்டு மக்கள் பலர் ராணுவத்தில் இணைந்து வருகின்றனர். இந்த நிலையில் கோவையைச் சேர்ந்த சாய் நிகேஷ் என்ற மாணவர் உக்ரைன் துணை ராணுவப் படையில் இணைந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உக்ரைன் நாட்டில் ஏரோபெஸ் என்ற பல்கலைக்கழகத்தில் படித்து வந்த சாய் நிகேஷ், அந்நாட்டின் நேஷனல் லிஜியன் என்னும் துணை ராணுவப் பிரிவில் சேர்ந்துள்ளார். இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் பரவி வரும் நிலையில் இந்திய உளவு அமைப்புகளின் விசாரணையில் இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே சாய்நிகேஷ் இந்திய ராணுவத்தில் சேர்ந்து பணிபுரிய விரும்பியதாகவும் ஆனால் அவர் உயரம் குறைவாக இருந்ததால் இந்திய ராணுவத்தில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் தற்போது போர் காரணமாக உக்ரைன் நாட்டில் உள்ள பொதுமக்கள் பலர் தங்கள் தாய்நாட்டை காக்க விரும்பி உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்து வரும் நிலையில் சாய் நிகேஷும் உக்ரைன் ராணுவத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது .

உக்ரைனில் படித்து வரும் இந்திய மாணவர்கள் அனைவரும் நாடு திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில் மாணவர் சாய்நிகேஷ் மட்டும் உக்ரைன் நாட்டின் ராணுவத்தில் இணைந்து ரஷ்யாவுக்கு எதிராக போர் புரிந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.