தமிழறிஞர், பேராசிரியர் மா.நன்னன் காலமானார்

  • IndiaGlitz, [Tuesday,November 07 2017]

ஒரு காலத்தில் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் அனைவருக்கும் தமிழ் கற்று கொடுத்த தமிழறிஞர் மா.நன்னன் அவர்களை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது. இந்த தமிழறிஞர் மா.நன்னன் இன்று காலமானார். அவருக்கு வயது 94

கடலூர் மாவட்டத்தை சேர்ந்த மா.நன்னன் கட்டுரைகள், பாடநூல்கள் உள்பட சுமார் 70 நூல்கள் எழுதியுள்ளார். அண்ணாமலை பல்கலையில் புலவர் பட்டம் பெற்ற நன்னன் அவர்கள், 'நன்னன் முறை' என்ற புதிய எழுத்தறிவித்தல் முறையை உருவாக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தமிழறிஞர் மட்டுமின்றி சுதந்திர போராட்டத்திலும் கலந்து கொண்ட தியாகி ஆவார்.

தமிழறிஞர் நன்னன் மறைவு குறித்து கவியரசு வைரமுத்து அவர்கள் தனது இரங்கல் அறிக்கையில் கூறுகையில், 'பேராசிரியர் மா.நன்னன் இழப்பு ஈடு செய்யப்பட வேண்டிய இழப்பு. அவரது இழப்பை 100 பேராசிரியர்கள் சேர்ந்து நிரப்ப வேண்டும். பல்கலைக்கழகமாக இருந்து நாட்டுக்கு தமிழ் அறிவித்தவர் பேராசிரியர் நன்னன். பக்தி இலக்கியங்களை படித்த பிறகும் பகுத்தறிவு பாசறையில் நின்றவர் மா.நன்னன்' என்று கூறியுள்ளார். தமிழறிஞர் மா.நன்னன் அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்தனை செய்வோம்.