டெல்டா விவசாயிகளுக்கு நல்ல செய்தி சொன்ன தமிழ்நாடு வெதர்மேன்!
- IndiaGlitz, [Monday,November 30 2020]
நிவர் புயல் காரணமாக சென்னை உள்பட வட மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது என்பதும் இதனால் சென்னையை சுற்றி உள்ள நீர்நிலைகள் நிரம்பி உள்ளன என்பதும் இதனால் வரும் கோடையில் சென்னை உள்பட வட மாவட்டங்களுக்கு தண்ணீர் கஷ்டம் என்பது இருக்காது என்பதும் தெரிந்ததே.
இருப்பினும் வடகிழக்கு பருவமழை காரணமாக தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் சுத்தமாக மழை பெய்யவில்லை. இதனால் டெல்டா விவசாயிகள் கடும் அதிர்ச்சியில் இருந்தனர். இந்த நிலையில் டெல்டா விவசாயிகளுக்கு தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அவர்கள் ஒரு மகிழ்ச்சியான செய்தியை கூறியுள்ளார்.
தற்போது தென்கிழக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏற்பட்டுள்ளதாகவும் இது மேலும் வலுப்பெற்று தென்மாவட்டங்களுக்கு நல்ல மழையை கொடுக்கும் என்றும் கணித்துள்ளார். குறிப்பாக தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மற்றும் தேனி, மதுரை, தஞ்சை, திருச்சி, புதுகை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் நல்ல மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார்.
தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் டிசம்பர் 2ஆம் தேதி முதல் டிசம்பர் 6ஆம் தேதி வரை நல்ல மழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளதை அடுத்து டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதுமட்டுமின்றி வெப்பச்சலனம் காரணமாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களிலும் மழை பெய்யும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் கணித்துள்ளார்.
மேலும் தென் மாவட்டங்களில் டிசம்பர் 3, 4 தேதிகளில் பலத்த காற்று வீசும் வாய்ப்பு உள்ளதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.