சென்னையில் 4 நாட்களுக்கு மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன்

சென்னையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகம் இருந்ததால் மக்கள் பெரும் அவதியில் இருந்த நிலையில் இன்று அதிகாலை திடீரென சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால் சென்னையே ஜில்லென்று மாறியது.

இந்த நிலையில் சென்னையில் இன்று மட்டுமின்றி இன்னும் நான்கு நாட்கள் கனமழை பெய்யும் என அவ்வப்போது தனது ஃபேஸ்புக் பக்கத்தில் மழை குறித்த விபரங்களை கூறிவரும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

சென்னையில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்துள்ளது. இது முதல் பேட்ச் தான். இன்னும் மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை மட்டுமின்றி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும் கடல் காற்று வலுவிழந்து வருவதால் அதிக மேகக் கூட்டங்களாக மாறும் வாய்ப்புள்ளது. இதனால் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புண்டு.

சென்னையை பொருத்தவரை இன்று குளிர்ச்சியான ஞாயிற்றுக்கிழமை. இன்று பெய்த மழை போல் இன்னும் 4 நாட்களில் நல்ல மழை வெளுத்து வாங்கும். சென்னையை சுற்றி சிவப்பு தக்காளிகள் அதிகம் உள்ளன. ஆனால் இந்த மழையை வரவேற்கவும் முடியாமல் வேண்டாம் என்று சொல்ல முடியாமல் சென்னை மக்கள் மக்களில் தவித்து வருகிறார்கள்’ என்று கூறியுள்ளார். சென்னையில் இன்று முதல் 4 நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் நான்கு நாட்கள் மழை பெய்யும் என்ற செய்தி நிம்மதியை அளித்துள்ளது.

இந்த நிலையில் இன்று அதிகாலை முதல் சென்னையின் முக்கிய பகுதிகளான வேளச்சேரி, ஆதம்பாக்கம், மடிப்பாக்கம், பூவிருந்தவல்லி, ஆவடி, அம்பத்தூர், திருநின்றவூர், போரூர், திருமுல்லைவாயில், பட்டாபிராம், பெருங்களத்தூர், வண்டலூர் ஆகிய பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்துள்ளது. மேலும் மெரினா, சாந்தோம், மந்தைவெளி, மயிலாப்பூர், பெருங்குடி, கந்தன் சாவடி, நுங்கம்பாக்கம், அண்ணாநகர், அடையாறு, திருவான்மியூர், அசோக் நகர், ஈசிஆர் சாலை, தி.நகர், மேற்கு மாம்பலம், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, மத்திய கைலாஷ், ஆலந்தூர், கிண்டி, கோடம்பாக்கம், வளசரவாக்கம், வடபழனி, தாம்பரம், அனகாபுத்தூர், திருவேற்காடு, போரூர், ஆவடி, புழல், செங்குன்றம், திருவள்ளூர், மணவாள நகர், கடம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.