சென்னையில் மழை எப்படி இருக்கும்? தமிழ்நாடு வெதர்மேன் தகவல்
- IndiaGlitz, [Friday,November 26 2021]
வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு காரணமாக சென்னையில் நேற்று முதல் விட்டுவிட்டு மழை பெய்து வரும் நிலையில் இன்றும் வரும் நாட்களிலும் சென்னை உள்பட தமிழகத்தின் மழை நிலவரம் குறித்து தமிழ்நாடுவெதர்மேன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:
சென்னை முதல் கடலூர் வரையிலான பகுதிகளில் மேகங்கள் சூழ்ந்து மழை பெய்வதால், இரவு முதல் காலை வரை தீவிரம் அதிகரிக்கும். கன்னியாகுமரியில் கனமழை பெய்யும்.
காயல்பட்டினத்தில் 300 மிமீ அளவில் வரலாறு காணாத மழை பெய்துள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி , தூத்துகுடி பகுதியில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பெரும்பாலான இடங்களில் 60 முதல் 90 மி.மீ. மழையும், செம்பரபாக்கம், தாம்பரம், சோழிங்கநல்லூர் ஆகிய இடங்களில் கிட்டத்தட்ட 100 மிமீ மழையும் பெய்துள்ளது. நாகை 200 செமீ மழையை நெருங்கியுள்ளது. மேலும் நேற்று மாநிலம் முழுவதும் பல மாவட்டங்களில் 100 மி.மீ.மழை இன்று காலை வரை பெய்துள்ளது.
சென்னை முதல் நாகை வரை கனமழை முதல் மிக கனமழை வரை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. டெல்டா முதல் ராமநாதபுரம் வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கடலூர், விழுப்புரம், நாகை, பெரம்பலூர், தஞ்சாவூர், செங்கல்பட்டு, திருவணாமலை கிழக்கு பகுதிகள், கள்ளக்குறிச்சி, அரியலூர், காரைக்கால், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துகுடி, சிவகங்கை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை ஆகிய நகரங்களில் மழையின் தீவிரம் அதிகரிக்கும்
நேற்று சென்னையில் பெரும்பாலான இடங்களில் 50-100 மிமீ மழை பெய்துள்ளது. நாளை சென்னையில் பெரும்பாலான நிலையங்கள் 100 மிமீ மழைக்கு வாய்ப்பு உள்ளது. இன்றும் நல்ல மழை பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த 3-4 நாட்களுக்கு வட தமிழகம் முதல் தெற்கு தமிழக கடலோர பகுதிகளுக்கு கனமழை அச்சுறுத்தல் இருக்கும். தூத்துகுடி மற்றும் நாகை மாவட்டங்களில் ஏற்கனவே நல்ல மழை பெய்து வரும் நிலையில் அது தொடரும்.
கன்னியாகுமரியில் கனமழை இன்னும் 1-2 மணி நேரம் நீடித்து அதன்பின்னர் படிப்படியாக குறையும். மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்யும். இவ்வாறு தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.