சென்னை மக்களே தயாராகுங்கள்: கனமழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன்!
- IndiaGlitz, [Monday,October 31 2022]
வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டதை அடுத்து சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னைக்கு அதிகமாக மழை இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது: வரும் நாட்கள் கடலோர பகுதிகளுக்கு நல்ல மழை தரும் நாட்களாக உள்ளது. இன்னும் ஓரிரு நாளில் மழை தீவிரம் அடையும். சென்னை எல்லையில் மேகமூட்டம் அதிகம் காணப்படுவதால் பகல் மற்றும் இரவு நேரங்களில் மழைடுப் தீவிரம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக கடற்கரையில் அதிகமான மேகங்கள் காணப்படுவதால் அவை மெதுவாக நகரும் போதும் நல்ல மழை பெய்யும். எனவே சென்னை மக்கள் கனமழைக்கு தயாராகுங்கள். இன்றும் நாளையும் சென்னையில் மிக கனமழை பெய்யும்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள கடலோர பகுதிகளில் இன்றும் நாளையும் பலத்த மழை பெய்யும். அதேபோல் நாகப்பட்டினம், காரைக்கால், கடலூர், விழுப்புரம் ஆகிய பகுதியில் உள்ள கடற்கரை பகுதிகளில் இன்றும் நாளையும் வெப்பம் அதிகமாக இருந்தாலும் ஒரு சில இடங்களில் மழை பெய்யும்.
மேலும் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி ஆகிய பகுதிகளிலும் கன்னியாகுமரியிலும் இன்றும் நாளையும் ஓரளவு மழை பெய்யும். ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களிலும் கடலோர பகுதிகளில் நாளை நல்ல மழை பெய்யும்.
தமிழ்நாட்டில் இன்னும் சில நாட்களுக்கு நல்ல மழையை எதிர்பார்க்கலாம். இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழையின் சிறந்த கட்டமாக இருக்கும். எனவே சென்னை மக்களே மழையை சந்திக்க தயாராகுங்கள் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.