சென்னை மழை முடிவுக்கு வந்துவிட்டதா? தமிழ்நாடு வெதர்மேன் தகவல்!

  • IndiaGlitz, [Monday,November 29 2021]

சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக கனமழை பெய்து வருவதால் சென்னையின் பல பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது என்பதும் இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அடுத்த நான்கு நாட்களில் சென்னையில் மழை எப்படி இருக்கும் என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது என்பதும் இன்று காலையும் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது என்றும் குறிப்பிட்டுள்ள தமிழ்நாடு வெதர்மேன் டிசம்பர் 1 வரை சென்னையில் விட்டு விட்டு மழை பெய்யும் என்றும் ஆனால் மோசமான மழை சென்னைக்கு முடிந்துவிட்டது என்றும் தமிழ்நாடு வெதர்மேன் குறிப்பிட்டுள்ளார். இதனால் சென்னை மக்கள் சற்று நிம்மதியாக அன்றாட வேலையை பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அதே நேரத்தில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என்றும் அரபிக்கடலில் தாழ்வு பகுதி உருவாகி இருக்கும் காரணத்தினால் கேரளாவிலும் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோல் கோவை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இன்னும் 2 அல்லது 3 நாட்களுக்கு மழை இருக்கும் என்றும் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவாக மாறி புயலாக மாறினாலும் ஆந்திராவை நோக்கி தான் செல்லும் என்றும் அதனால் தமிழகத்தில் கனமழை குறைவு என்றும் தெரிவித்துள்ளார். இருப்பினும் புயல் குறித்து தெளிவான தகவல்கள் கிடைத்த பின் மீண்டும் அப்டேட் செய்யப்படும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் தெரிவித்துள்ளார்.