வர்தா புயலுக்கு நிகரான வேகம்: கஜா புயல் குறித்து தமிழ்நாடு வெதர்மேன்
- IndiaGlitz, [Friday,November 16 2018]
வங்கக்கடலில் உருவான கஜா புயல சில மணி நேரங்களுக்கு முன் தமிழக கரையை கடந்துள்ள நிலையில் இந்த புயல் வர்தா புயலுக்கு நிகரான வேகத்தை கொண்டிருந்ததாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
கஜா புயல் குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தமிழ்நாடு வெதர்மேன் கூறியதாவது: ' கஜா புயல் கரையைக் கடந்த பின்னரும்கூட தீவிர புயலாக உள்ளது. தற்போது கஜா புயல் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது. இது மிகவும் அரிய நிகழ்வு. புதுக்கோட்டையில் மணிக்கு 100 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசுகிறது. நாகை, திருவாரூர், தஞ்சாவூர், காரைக்கால் மாவட்டங்களில் சூறாவளிக் காற்று வீசியது. வர்தா புயலுக்கு நிகராக கஜா புயலின் காற்றின் வேகம் இருந்துள்ளது. சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. குறிப்பாக கொடைக்கானல் பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதால் அப்பகுதி மக்கள் இன்னும் சில மணி நேரங்களுக்கு வீட்டில் இருப்பது சிறந்தது.
திருச்சி, கரூர் ஆகிய பகுதிகளிலும், வால்பாறை, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி, வடக்கு, கிழக்கு ராமநாதபுரம் மாவட்டங்களிலும், தூத்துக்குடியின் வடக்கு பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது.
புயல் கடக்கும்போது இருந்த காற்றின் வேகம் குறித்த தகவல்:
அதிராமப்பட்டினம் - 111 km/hr (0230 IST)
நாகப்பட்டினம் - 100 km/hr (0230 IST)
காரைக்கால் - 92 km/hr (0130 IST)
மீனம்பாக்கம் - 122 km/hr,
நுங்கம்பாக்கம் - 114 km/hr
எண்ணூர் - 89 km/hr
இவ்வாறு தமிழ்நாடு வெதர்மேன் குறிப்பிட்டுள்ளார்.