புயலும் இல்லை, மழையும் இல்லை, கடுமையான வெயில்தான்: ஃபனி புயல் குறித்து தமிழ்நாடு வெதர்மேன்
Send us your feedback to audioarticles@vaarta.com
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக மாறி ஃபனி புயலாகவும் மாறியதால் இந்த புயல் தமிழகம் வழியே கரையை கடக்கும் என நேற்று வரை எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது தமிழக கடற்கரையில் இருந்து 1200 கிமீ தூரத்தில் மையம் கொண்டிருக்கும் ஃபனி புயல், தமிழக கடற்கரையில் இருந்து சுமார் 300 கிமீ தூரத்திலேயே திசைமாறி வங்கதேசம் நோக்கி செல்லவே வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்த புயல் தமிழகத்தில் இருந்து 150 கிமீ தூரத்தில் கடந்து சென்றால் மட்டுமே தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஆனால் 300 கிமீ தூரத்தில் கடந்து செல்வதால் மழை இல்லை என்பது மட்டுமின்றி வழக்கத்தை விட அதிக வெப்பம் இருக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஃபனி புயல் மேற்குத்திசையில் இருந்து ஒட்டுமொத்த ஈரப்பதத்தையும் வெப்பத்தையும் இழுத்துக்கொண்டு கடக்கத் தொடங்குவதால் வெயிலின் தாக்கம் இயல்புக்கும் அதிகமாக இருக்கும் என்றும், கடற்கரையில் இருந்துவரும் கிழக்குக் காற்றும் நிலப்பகுதிக்கு வராது என்றும், இதனால் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார். ஏற்கனவே அக்னி நட்சத்திரம் நெருங்கி வருவதால் தமிழகத்தில் அதிக வெப்பம் இருக்குமென எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது ஃபனி புயலால் இன்னும் அதிகம் வெப்பம் இருக்கும் என்ற செய்தி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும் ஃபனி புயல் கடக்கும் தூரத்தை நாளை தான் சரியாக கணிக்க முடியும் என்பதால் தமிழகத்தில் மழை உண்டா? இல்லையா? என்பது நாளை உறுதியாக தெரிந்துவிடும். ஒருவேளை தமிழகத்துக்கு 150 கி.மீ. தொலைவுக்குள் ஃபனி புயல் கடந்து சென்றால் தமிழக கடற்கரையோர மாவட்டங்கள், கன்னியாகுமரி, டெல்டா மாவட்டங்கள், உள்மாவட்டங்கள் ஆகிவற்றிலும் மழை பெய்ய வாய்ப்பு உண்டு என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.
இதற்கு முன்னர் கடந்த 1998-ம் ஆண்டு மே 30-ம் தேதி உருவான புயலும், 2003-ம் ஆண்டு மே 31-ம் தேதி உருவான புயலும் தமிழகத்தின் அருகே வந்து திசை மாறி சென்றதால் வெயிலின் தாக்கம் அதிகம் இருந்து ஆயிரக்கணக்கானோர் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி ஒரு நிலைமை தற்போது வருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout