சென்னைக்கு வெள்ள அபாயமா? என்ன சொல்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்?
- IndiaGlitz, [Thursday,April 25 2019]
தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி தோன்றியுள்ளதால் அது புயலாக மாற வாய்ப்பு இருப்பதாகவும், இதன் காரணமாக வரும் 29ஆம் தேதி சென்னை உள்பட தமிழக கடலோர பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் வானிலை அறிக்கைகளை அவ்வப்போது துல்லியமாக தனது முகநூல் பக்கத்தில் வழங்கி வரும் தமிழ்நாடு வெதர்மேன் இதுகுறித்து கூறியபோது, 'புயல் உருவாகி இருப்பதன் காரணமாக கனமழை பெய்ய போவது உறுதிதான். இந்த புயல் தமிழகத்தில் கரையை கடந்தால் கனமழையுடன் வெள்ளமும் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. ஆனால் தமிழகத்தில் வழியாகத்தான் கரையை கடக்கும் என்பதை துல்லியமாக கூற இன்னும் ஒருநாள் தேவைப்படுகிறது. இருப்பினும் இப்போதுள்ள நிலைமையை வைத்து பார்க்கும்போது இந்த புயல் தமிழகத்தின் வழியே கரையை கடக்க 60% வாய்ப்பு உள்ளது.
புயல் கரையை கடப்பது இயற்கையின் த்ரில் அனுபவங்களில் ஒன்று. புயல் கரையை கடக்கும்போது மரங்கள் முறிவது உள்பட ஒருசில சேதங்கள் ஏற்பட்டாலும் இப்போதைய தண்ணீர் தட்டுப்பாடு நிலையில் தமிழகத்தின் வழியே புயல் கரையை கடக்க வேண்டும் என்றுதான் பலர் வேண்டுதல் செய்து வருகின்றனர். புயல் கரையை கடக்கும்போது பொழியும் கனமழையால் ஏரி, குளம், நீர் நிலைகள் அனைத்தும் நிரம்பி தண்ணீர் கஷ்டத்திற்கு டாடா காட்டிவிடும். புயலால் ஏற்படும் ஒருசில துயரங்களை தாங்கிக்கொண்டால் இந்த ஆண்டு தண்ணீர் கஷ்டத்தில் இருந்து சென்னை உள்பட தமிழக மக்கள் தப்பித்துவிடுவார்கள்.
இவ்வாறு தமிழ்நாடு வெதர்மேன் குறிப்பிட்டுள்ளார்.