அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்கும் மாநிலங்கள்… முதல் இடத்தைப் பிடித்து தமிழகம் சாதனை!!!
- IndiaGlitz, [Friday,November 27 2020]
அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்கும் மாநிலங்களுக்கான விருதுப் பட்டியலில் தமிழகம் முதலிடம் பெற்று இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்தியா டுடே பத்திரிக்கை ஸ்டேட் ஆஃப் ஸ்டேட்ஸ் இ- கான்க்ளேவ் விருதுகள் எனும் கருத்துக் கணிப்பை நடத்தி அந்தப் பட்டியலில் முதல் இடத்தைப் பிடிக்கும் மாநிலங்களுக்கு பரிசை வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த ஆண்டுக்கான விருதுப் பட்டியலில் தமிழகம் முதல் இடத்தைப் பிடித்து உள்ளது.
ஸ்டேட் ஆஃப் ஸ்டேட்ஸ் இ-கான்க்ளேவ் விருதுகள் 2020 விருது வழங்கும் விழா நாளை நடைபெற இருந்த நிலையில் அந்த விழா வரும் டிசம்பர் 5 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு இந்தியா டுடே நடத்திய கருத்துக் கணிப்பில் அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்கும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதலிடம் பிடித்து உள்ளது. இதனால் சிறந்த மாநிலமாகத் தேர்வு செய்யப்பட்டு உள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு வரும் டிசம்பர் 5 ஆம் தேதி விருது வழங்கப்பட இருக்கிறது.
இந்தப் பட்டியலில் இமாச்சலப் பிரதேசம் 2 ஆவது இடத்தையும், பஞ்சாப் 3 ஆவது இடத்தையும் கேரளா 4 ஆவது இடத்தையும் குஜராத் 5 ஆவது இடத்தையும் பிடித்து உள்ளது. அதேபோல 6-10 வரையிலான இடங்களை ஆந்திரப்பிரதேசம், மகாராஷ்டிரா, தெலுங்கானா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்கள் அடுத்தடுத்து தக்க வைத்துக் கொண்டுள்ளன. முதல் 20 மாநிலங்களின் விருது பட்டியலில் பீகார் இருபதாவது இடத்தைப் பிடித்து பின்னுக்குத் தள்ளப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.