திங்கள் முதல் தியேட்டர்கள் மூடல்: நேற்று வெளியான படங்களின் கதி?
- IndiaGlitz, [Saturday,July 01 2017]
ஜிஎஸ்டி வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் வரும் திங்கள் முதல் தியேட்டர்கள் அனைத்தும் காலவரையின்றி மூடப்படும் என தமிழக திரையரங்கு உரிமையாளர் சங்கத்தலைவர் அபிராமி ராமநாதன் நேற்று அறிவித்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரியிலும் திரையரங்குகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரியை கூட கட்ட தயார், தமிழக அரசின் நகராட்சி வரியான 30% வரி ரத்து செய்யப்பட வேண்டும் என்பதே தற்போது பலரது கோரிக்கையாக உள்ளது
இந்த நிலையில் நேற்று நடிகர் தம்பிராமையாவின் மகன் உமாபதி முதன்முதலாக ஹீரோவாக அறிமுகமாகிய 'அதாகப்பட்டது மகாஜனங்களே' திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்திற்கு ஊடகங்களில் பாசிட்டிவ் ரிசல்ட் கிடைத்திருக்கும் நிலையில் தற்போது திடீரென திரையரங்கு உரிமையாளர்களின் ஸ்டிரைக் அறிவிக்கப்பட்டுள்ளதால் உமாபதி உள்பட படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதேபோல் கவுதம் கார்த்திக், ஆர்ஜே பாலாஜி நடித்த 'இவன் தந்திரன்' படமும் நல்ல ரிசல்ட்டை பெற்றுள்ளதால் இந்த படத்தின் குழுவினர்களும் சோகத்தில் உள்ளனர்.
மேற்கண்ட இரண்டு படங்கள் மட்டுமின்றி நேற்று வெளியான ஏழு தமிழ்ப்படங்கள் உள்பட வெளியான 11 படங்களின் வசூல் பெருமளவு பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. ஆன்லைன் பைரசி, திருட்டு டிவிடி ஆகியவைகளால் தத்தளித்து கொண்டிருக்கும் தமிழ்சினிமா, தற்போது ஜிஎஸ்டி வடிவில் இன்னொரு புது பிரச்சனையையும் சமாளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.