திரையரங்குகள் திறப்பது குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு!
- IndiaGlitz, [Saturday,August 21 2021]
தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு வரும் 23ஆம் தேதி காலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில், ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கூடுதல் தளர்வுகள் அறிவிப்பது குறித்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று காலை ஆலோசனை செய்தார். இந்த ஆலோசனையில் அமைச்சர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் கலந்து கொண்டதாக செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்கள் நீட்டிக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் ஊரடங்கில் சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் சினிமா தியேட்டர்கள் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல் 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகள் திறக்க அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9 முதல் 12-ம் வகுப்புகள் வரை பள்ளிகளை திறக்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் இரவு 10 மணி வரை கடைகள், வணிக நிறுவனங்கள் திறக்க அனுமதித்துள்ள தமிழக அரசு தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகளில் உள்ள மதுக்கடைகளை திறக்க அனுமதி அளித்துள்ளது.
தமிழகத்தில் திரையரங்குகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக திரைஅரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்த நிலையில் தற்போது அந்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.