உக்ரைன் ராணுவத்தில் இணைந்த தமிழக மாணவர்… யார் இந்த சாய் நிகேஷ்?
- IndiaGlitz, [Tuesday,March 08 2022]
கடுமையான போருக்கு மத்தியில் உக்ரைன் நாட்டில் படித்துவந்த கோவை மாணவர் ஒருவர் உக்ரைன் நாட்டின் துணை இராணுவத்தில் இணைந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம் துடியலூர் பகுதியைச் சேர்ந்த சாய் நிகேஷ் ரவீந்திரன் என்பவர் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் உக்ரைன் நாட்டின் கார்க்கிவ் பகுதியில் இயங்கி வரும் நேஷனல் ஏரோஸ்பேஸ் பல்கலைக்கழகத்தில் விண்வெளி அறிவியல் துறையில் படித்து வருகிறார். தற்போது 4 ஆவது ஆண்டு மாணவரான இவர் சிறுவயது முதலே இராணுவத்தில் இணைவதற்கு விரும்பியதாகவும் உயரம் காரணமாக அது நடக்காமல் போனதாகவும் கூறப்படுகிறது.
கடந்த 2018 இல் பள்ளிப்படிப்பை முடித்த சாய் நிகேஷ் ரவீந்திரன் முதலில் இந்திய இராணுவத்தில் இணைய முயன்றிருக்கிறார். உயரம் காரணமாக அது இயலாமல் போகவே பின்பு இந்திய வெளியுறவுத்துறை மூலம் அமெரிக்க இராணுவத்தில் இணைய முயன்று இருக்கிறார். ஆனால் அதுவும் பலனை தராத நிலையில் உக்ரைனில் விண்வெளி துறை அறிவியல் பட்டப்படிப்பை பயிலத் துவங்கியிருக்கிறார்.
இந்நிலையில் தற்போது கடும் நெருக்கடிக்கு மத்தியில் உக்ரைனில் இருக்கும் இந்திய மாணவர்கள் அனைவரும் சொந்த நாட்டிற்கு திரும்பி வருகின்றனர். ஆனால் போர் துவங்கிய 5 ஆவது நாள் முதலே சாய் நிகேஷ் உக்ரைன் இராணுவத்தில் இணைந்து விட்டதாகவும் மேலும் பெற்றோருடன் தொடர்பில் இருக்கும் அவர் இந்தியா திரும்புவதற்கு மறுத்துவிட்டதாகவும் பெற்றோர்கள் சார்பாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து மத்திய மாநில உளவுத் துறை அமைப்பினர் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அந்நாட்டு பொதுமக்களுக்கு 18 ஆயிரம் துப்பாக்கிகளை கொடுத்து தனது இராணுவத்தில் இணைத்துக் கொண்டார். மேலும் பொதுமக்களுக்கு பெட்ரோல் எரிகுண்டுகளை செய்வது குறித்து வீடியோ பயிற்சி வழங்கிய அந்நாட்டு பாதுகாப்பு துறை மற்ற வெளிநாட்டினரும் உக்ரைனுக்கு ஆதரவாக போரில் இறங்கவும் அழைப்பு விடுத்தது.
அந்த அடிப்படையில் ஏராளமான வெளிநாட்டு இளைஞர்கள் தற்போது உக்ரைன் நாட்டிற்கு ஆதரவாக இராணுவத்தில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் தற்போது உக்ரைனுக்கு ஆதரவாக இந்திய மாணவர் சாய் நிகேஷ் ரவீந்திரன் அந்நாட்டின் ஜார்ஜியன் நேஷனல் லிஜியன் எனும் துணை இராணுவத்தில் இணைந்து பணியாற்றி வருவதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.