10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு!
- IndiaGlitz, [Friday,May 19 2017]
கடந்த மார்ச் மாதம் 8-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நடைபெற்ற எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 10 லட்சத்து 38 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ-மாணவிகள் எழுதிய நிலையில் இந்த தேர்வின் முடிவுகளை இன்று காலை 10 மணிக்கு அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி காலை 10 மணிக்கு வெளியிடுகிறார். தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினை பதிவு செய்து தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளியில் பதிவு செய்யப்பட்டுள்ள மொபைலில் குறுஞ்செய்தியாக முடிவுகளை தெரிந்துகொள்ளும் வசதியும் இந்த வருடம் முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பிளஸ் 2 போலவே இந்த வருடம் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்விலும் முதல் மாநில மற்றும் மாவட்ட அளவில் முதல் 3 இடங்களைப் பிடித்தவர்கள், பாடவாரியாக முதல் 3 இடங்கள் பெற்றவர்களின் ரேங்க் பட்டியல் எதுவும் வெளியிடப்படாது. இவ்வாறு மாணவர்களைத் தர வரிசைப்படுத்துவது மாணவர்கள், பள்ளிகள் இடையே ஆரோக்கியமற்ற போட்டிச் சூழலை ஏற்படுத்தக்கூடும் என்பதால், அதை தவிர்க்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளிவந்தவுடன் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவ, மாணவிகள் இன்று முதல் அதாவது மே 19 ஆம் தேதி காலையில் இருந்து, மே 22 ஆம் தேதி மாலை வரை விண்ணப்பிக்கலாம். தமிழ், ஆங்கிலப் பாடங்களுக்கான மறுகூட்டலுக்கு 305 ரூபாயும், மற்ற பாடங்களுக்கு 205 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. தற்காலிக மதிப்பெண் சான்றிதழை மே 25-ம் தேதி முதல் மேற்கூறிய இணையதளங்களில் பெற்றுக்கொள்ளலாம். தேர்வில் வெற்றியை எதிர்பார்த்து காத்திருக்கும் அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் IndiaGlitz தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.