ஆப்பிள் தயாரிப்புகளின் புதிய மையமாகிறது தமிழகம்- முதல்வரின் நடவடிக்கையால் சாத்தியம்!
- IndiaGlitz, [Saturday,January 30 2021]
நேற்று தமிழக அமைச்சரவையில் நடைபெற்ற கூட்டத்தொடரில் 52 புதிய தொழில் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதனால் ரூ.52,257 கோடி முதலீட்டில் ஆப்பிள் நிறுவனத்தின் உற்பத்திப் பொருட்களை தமிழகத்தில் தயாரித்து உலக நாடுகளுக்கு அனுப்பப்பட உள்ளன. மேலும் இப்புதிய திட்டங்களின் வாயிலாக தமிழகத்தை சேர்ந்த சுமார் 95,000 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
முன்னதாக கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஒசூர் பகுதியில் ஆப்பிள் நிறுவனப் பொருட்களை தயாரிப்பதற்கு புதிய தொழில் திட்டங்கள் உருவாக்கப்பட்டன. இத்திட்டத்திற்காக 5,763 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கிட்டத்தட்ட 18 ஆயிரத்து 250 வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதையடுத்து தற்போது சென்னையில் இருந்து சுமார் 60 கி.மீ தொலைவில் ஆப்பிள் நிறுவனத்தின் தொலைபேசிகளை உற்பத்தி செய்வதற்கும் இதற்கான புதிய தொழில் நிறுவனம் தொடங்கவும் ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது.
இந்நிலையில் ஆப்பிள் நிறுவனத்தின் உற்பத்தி பொருட்களை தயாரிப்பதற்கு டாடா எலக்ட்ரானிக்ஸ், பெகாட்ரான் கார்ப்பரேஷன் மற்றும் லக்ஸ்ஷேயர் ஆகிய தொழில் நிறுவனங்கள் முன்வந்துள்ளன. இதன் ஒட்டுமொத்த முதலீடு ரூ.52,257 கோடி. இப்புதிய தொழில் நிறுவனங்களால் தமிழகத்தில் உள்ள 95 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இந்திய அளவில் அதிக முதலீடுகளை ஈர்த்தும் தொழில் நிறுவனங்களைத் தொடங்கியும் தமிழக அரசு அதிரடி காட்டிவருகிறது. இந்நிலையில் ஒட்டுமொத்த ஆப்பிள் நிறுவனத் தயாரிப்புகளின் மையமாக தமிழக மாறிவருவது மக்கள் மத்தியில் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.