ஐபிஎல் ஏலத்தில் ஜொலித்த தமிழக வீரர்கள்: கைவிட்ட சிஎஸ்கே அணி
- IndiaGlitz, [Monday,February 14 2022]
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தமிழகத்தை சேர்ந்த ஏழு வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டு இருந்தாலும் சிஎஸ்கே அணி தமிழக வீரர்களை கைவிட்டது ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் வீரர்களை ஏலம் எடுக்கும் பணி கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற நிலையில் இந்த ஏலத்தில் 30 தமிழ்நாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.
முதல் நாளில் தமிழக வீரரான ஷாருக்கானை ஏலம் எடுக்க சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் அணி இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் 9 கோடிக்கு பஞ்சாப் அணி ஷாருக்கானை ஏலம் எடுத்தது. அதேபோல் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரை 8 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கு ஐதராபாத் அணி ஏலம் எடுத்தது. யார்க்கர் கிங் நடராஜனையும் ஐதராபாத் அணி ரூ.4 கோடிக்கு ஏலம் எடுத்தது
மேலும் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கை 5.5 கோடிக்கு பெங்களூரு அணியும், அஸ்வினை 5 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் அணியும் ஏலம் எடுத்துள்ளது. இவர்கள் இருவரும் அந்தந்த அணிக்கு கேப்டனாகவும் நியமனம் செய்யப்பட வாய்ப்புள்ளது.
தமிழகத்தை சேர்ந்த இளம் வீரர் சாய் கிஷோரை ரூ. 3 கோடி ரூபாய்க்கு குஜராத் அணிஏலம். மேலும் எடுத்துள்ளது சிவகங்கையை சேர்ந்த முருகன் அஸ்வினை மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு கோடியே 6 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. தமிழக வீரர்களை மற்ற அணி ஆர்வத்துடன் ஏலம் எடுத்தாலும் தமிழகத்தின் அணியில் தமிழர்கள் அதிகம் இடம்பெறாதது அதிருப்தியாகவே உள்ளது.