டெஸ்லாவின் முதல் ஊழியரே ஒரு தமிழரா? இணையத்தில் வைரலாகும் தகவல்!
- IndiaGlitz, [Monday,January 03 2022]
சமீபகாலமாக மின்சார கார் உற்பத்தி மற்றும் விண்வெளி துறை ஆராய்ச்சிகளில் அசுர வளர்ச்சியை அடைந்துவரும் டெஸ்லா நிறுவனத்தின் முதல் ஊழியரே ஒரு தமிழர்தான் என்ற தகவல் தற்போது இணையத்தில் தீயாய் பரவிவருகிறது.
உலகின் டாப் 3 பணக்காரர்கள் வரிசையில் தொடர்ந்து இடம்பிடித்து வரும் எலான் மஸ்க் துவங்கிய நிறுவனம்தான் டெஸ்லா. இந்நிறுவனம் மின்சாரம் மற்றும் தானியங்கி கார்களை தயார் செய்து உலகம் முழுவதும் விற்பனை செய்துவருகிறது. மேலும் ஸ்பேஸ் குறித்த ஆராய்ச்சி மற்றும் விண்வெளி சுற்றுலா போன்ற விஷயங்களில் தொடர்ந்து அசுர வளர்ச்சிகளைக் கண்டுவருகிறது.
இந்நிலையில் நிருபர் ஒருவர் டெஸ்லா நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு பிரிவு தொடர்பான கேள்விகளை எலான் மஸ்க்கிடம் எழுப்பி இருக்கிறார். இதற்குப் பதிலளித்த எலான் மஸ்க் அந்தக் குழுவில் பணியாற்றும் ஆண்ட்ரெஜ் மற்றும் குழுவின் தலைவர் அசோக் பற்றி சிலாகித்துப் பாராட்டியிருக்கிறார். மேலும் உலகின் சிறந்த பொறியாளர்கள் பலரும் இந்தக் குழுவில் இருப்பதாகக் கூறியுள்ளார்.
மேலும் தனது ஆட்டோ பைலட் குழுவைப் பற்றி பேசிய எலான் மஸ்க், டெஸ்லாவின் முதல் ஊழியர் அசோக்தான். கடந்த 2015 ஆம் ஆண்டு டெஸ்லாவின் ஆட்டோ பைலட் என்ஜினியரிங் குழுவிற்கு விண்ணப்பிக்குமாறு நான் டிவிட்டரில் பதிவிட்டு இருந்தேன். அந்தப் பதிவைப் பார்த்து அசோக் விண்ணப்பித்து இருந்தார். அவரை நான் தேர்வுசெய்துகொண்டேன் என்ற தகவலைத் தெரிவித்துள்ளார்.
இதனால் டெஸ்லாவின் முதல் ஊழியரே ஒரு தமிழர்தான் என்ற தகவல் தற்போது தெரியவந்துள்ளது. சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் ECE படிப்பை முடித்த அசோக் எல்லுசாமி பின்னர் கார்னேகி பல்கலைக்கழகத்தில் ரோபோட்டிக் மேல்படிப்பை முடித்துள்ளார்.
தொடர்ந்து நுண்ணறிவு தொடர்பான விஷயங்களில் அதிக ஆர்வம் காட்டிய அசாக், வோக்ஸ்வேகன் கார் நிறுவனத்தின் எலக்ட்ரிக் ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றியுள்ளார். அடுத்து WABCO நிறுவனத்தில் பணியாற்றிய இவர் டெஸ்லாவிற்கு விண்ணப்பித்து கடந்த 2015 முதல் டெஸ்லா ஆட்டோ பைலட் குழுவில் இணைந்து பணியாற்றி வருகிறார். தற்போது அந்த குழுவின் தலைவராக உயர்ந்து இருப்பது கூடுதல் சிறப்பாகப் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் எலான் மஸ்கின் வாயிலாக அசோக் எல்லுசாமி பற்றிய தகவல் பரவியதை அடுத்து பலரும் அசோக் எல்லுசாமிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
Elon on Teslas Autopilot team: Ashok is actually the head of Autopilot engineering. Andrej is director of AI; People often give me too much credit & give Andrej too much credit. The Tesla Autopilot AI team is extremely talented. Some of the smartest people in the world. @elonmusk pic.twitter.com/a6vJ64aphG
— Sawyer Merritt (@SawyerMerritt) December 29, 2021