தமிழகம் வெற்றி நடை போடுகிறது… ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பாராட்டு!
- IndiaGlitz, [Tuesday,February 02 2021]
தமிழக அரசு சிறப்பான செயல்பாடுகளை மேற்கொண்டு பல விருதுகளைக் குவித்து இருப்பதோடு சிறப்பான ஆட்சியால் வெற்றி நடைபோடுவதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பாராட்டு தெரிவித்து உள்ளார். வரும் சட்டமன்றத் தேர்தலுக்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெற்றி நடைபோடும் தமிழகம் என்ற பெயரில் தீவிரப் பிரச்சாரம் செய்து வருகிறார். இந்நிலையில் ஆளுநர் பன்வாரிலால் தமிழகம் சிறப்பான ஆட்சியால் வெற்றிநடை போடுகிறது எனப் பாராட்டு தெரிவித்து உள்ளார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இது என்பதால் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரை நிகழ்த்தினார். இந்த உரையின்போது அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இடஒதுக்கீடு கொண்டு வந்து சமூக நீதியை நிலை நாட்டியவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி என்றும் “அம்மா மினி கிளினிக்” தொடங்கியதற்காகவும் சிறப்பு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டார். அதோடு தமிழகம் அனைத்து துறைகளிலும் முன்னிலை வகிப்பதால் நிர்வாக திறன் மிக்க மாநிலம் என்ற பாராட்டை பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனால் தமிழகம் தேசிய அளவில் பல்வேறு விருதுகளை பெற்று வெற்றி நடை பொடுவதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் புகழாராம் சூட்டினார். மேலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் சிறப்பாக செயல்படும் அனைத்துத் துறைகளுக்கும் பாராட்டுகளை தெரிவிப்பதாகவும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கூறியுள்ளார்.