தமிழகத்தில் மீண்டும் லாக் டவுனா? சுகாதாரத்துறை செயலாளர் அளித்த பதில்!
- IndiaGlitz, [Wednesday,March 17 2021]
தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் 897 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. மேலும் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 28,903 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மேலும் பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் தமிழகத்தில் மீண்டும் கொரோனா ஊரடங்கு அமலுக்கு வருமா? என்ற சந்தேகம் தற்போது வலுத்து வருகிறது.
இந்தக் கேள்விக்கு பதில் அளித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு என்னும் வதந்திகளை நம்ப வேண்டாம். இருப்பினும் தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் ஏறுமுகமாக உள்ளது. இதனை மக்கள் அறிந்து விழிப்புடன் செயல்பட வேண்டும் எனத் தெரிவித்து உள்ளார்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவில் இன்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். அதற்கு பின்பு செயதியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர் “அமெரிக்கா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் கொரோனா தாக்கம் அதிகப்படியாக உள்ள நிலையில் தற்பொழுது இந்தியாவில் 19 மாநிலங்களில் கொரோனா நோய்த்தொற்று ஏறுமுகமாக உள்ளது. இந்த மாநிலங்களில் தமிழகமும் அடங்கும். இதை பொதுமக்கள் உணர்ந்து நோயை முற்றிலும் ஒழிக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
மேலும் கொரோனா விதிமுறைகளையும், பாதுகாப்பு ஆலோசனைகளைப் பற்றியும் கூறிய அவர் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு என்னும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.