கல்வித்துறையில் முன்னோடியாக விளங்கும் தமிழகம்!!! அதிரடி திட்டங்கள்!!!
- IndiaGlitz, [Friday,August 28 2020]
உயர்கல்வி படிப்புகளுக்கான சேர்க்கை விகிதத்தில் இந்திய அளவில் தமிழகம் முதலிடத்தை பிடித்து இருக்கிறது. இந்தியா முழுவதும் வருகிற 2035 ஆம் ஆண்டுவரை நிர்ணயிக்கப்பட்ட இலக்கை தமிழகம் 2020 ஆண்டிலேயே எட்டியிருக்கிறது. இதனால் கல்வித்துறையில் முன்னேற்றம் பெற்ற மாநிலமாகத் தமிழகம் திகழ்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழக மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல புதிய திட்டங்களைத் தீட்டி வருகிறார். இதனால் கடந்த 9 ஆண்டுகளில் கல்லூரி மாணவர்களின் சேர்க்கை விகிதம் 49% ஆக உயர்ந்து இருக்கிறது. முன்னதாக 2035 ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும உயர் கல்வியில் மாணவர் சேர்க்கை 50% ஆக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. அந்த இலக்கை தமிழகம் 2020 இல் வெற்றிகரமாக முடித்திருக்கிறது. அதைத்தவிர இந்திய அளவில் சிறந்த கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களும் தமிழகத்தில் ஏற்படுத்தப் பட்டு இருக்கின்றன. இந்த விவரங்களை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை வெளியிட்ட தரவரிசை பட்டியல் வழியாக அறிந்து கொள்ள முடிகிறது.
இந்தியாவின் தலைசிறந்த 200 பொறியியல் கல்லூரிகளின் பட்டியலில் தமிழகத்தைச் சார்ந்த 34 கல்லூரிகள் இடம்பிடித்து இருக்கின்றன. இதன் மூலம் நாட்டிலேயே அதிகமான சிறந்த பொறியியல் கல்லூரிகளை கொண்ட மாநிலமாகத் தமிழகம் திகழ்கிறது. அதுவும் தமிழ்நாட்டைச் சார்ந்த ஐஐடி மெட்ராஸ் இந்திய அளவில் முதல் இடத்தை பிடித்த பொறியியல் கல்வி நிறுவனமாக திகழ்கிறது.
அடுத்து, இந்தியாவின் தலைசிறந்த 20 கட்டிடக்கலை கல்லூரிகளின் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த 4 கல்லூரிகள் இடம் பெற்றுள்ளன. இதன்மூலம் நாட்டிலேயே அதிகமான சிறந்த கட்டிடக்கலை கல்லூரிகளைக் கொண்ட மாநிலமாகத் தமிழகம் திகழ்கிறது என்பதும் சிறப்புரிய விஷயம்.
அடுத்து, இந்தியாவின் தலைசிறந்த 40 மருத்துவக் கல்லூரிகளின் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த 7 மருத்துவக் கல்லூரிகள் இடம் பிடித்துள்ளன. இதன் மூலம் நாட்டிலேயே அதிகமான சிறந்த மருத்துவக் கல்லூரிகளைக் கொண்ட மாநிலமாகத் தமிழகம் விளங்குகிறது. இதில் இந்திய அளவில் வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி இந்திய அளவில் மூன்றாவது இடத்தை பிடித்த மருத்துவக் கல்லூரியாகத் திகழ்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அடுத்து, இந்தியாவின் தலைசிறந்த 100 பல்கலைக் கழகங்களின் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த 18 பல்கலைக் கழகங்கள் இடம்பிடித்துள்ளன. இதன் மூலம் நாட்டிலேயே அதிகமான சிறந்த பல்கலைக் கழகங்களைக் கொண்ட மாநிலமாகத் தமிழகம் உள்ளது. அதிலும் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த அம்ரிதா பல்கலைக் கழகம் இந்திய அளவில் 4 ஆவது சிறந்த பல்கலைக் கழகமாகத் திகழ்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்தியாவின் தலைசிறந்த 100 கல்லூரிகளின் பட்டியலில் 18 தமிழகக் கல்லூரிகள் இடம்பிடித்து உள்ளன. இதன்மூலம் நாட்டிலேயே அதிகமான சிறந்த கல்லூரிகளை கொண்ட மாநிலமாகத் தமிழகம் திகழ்கிறது. இதிலும் தமிழகத்தைச் சார்ந்த ஐஐடி மெட்ராஸ் இந்திய அளவில் முதல் இடத்தைப் பிடித்து இருக்கிறது. இவ்வாறு பொறியியல், கட்டிடக்கலை, மருத்துவம், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் என அனைத்துத் துறை சார்ந்த கல்வி நிறுவனங்களிலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கையால் தமிழகம் தலைசிறந்த மாநிலமாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது.
அதுமட்டுமல்லாமல், தமிழக முதல்வரின் சீரிய முயற்சியால் உயர் கல்வி சேர்க்கையில் பாலின வேறுபாட்டையும் தமிழகம் கடந்துள்ளது. உயர் கல்வி சேர்க்கையில் ஆண்களின் விகிதம் 49.8% ஆகவும், பெண்களின் விகிதம் 48.3 ஆகவும் உள்ளது. இதிலும் தமிழகம் முன்னோடியாக விளங்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.