ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 800 மீட்டர் மகளிர் ஓட்டப்பந்தயம் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த கோமதி மாரிமுத்து தங்கப்பதக்கம் வென்று இந்தியாவுக்கே பெருமை சேர்த்துள்ளார். ஏழை விவசாயி ஒருவரின் மகள் பெற்ற இந்த சாதனைக்கு நாடு முழுவதிலும் இருந்து பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் குவிந்து வரும் நிலையில் தமிழக அரசியல் தலைவர்கள் தங்கமகள் கோமதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி: ஆசியதடகள போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை புரிந்துள்ளீர்கள் என்ற செய்தியை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்
மு.க.ஸ்டாலின்: 800 மீ ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவுக்கு கோமதி மாரிமுத்து முதல் தங்கத்தை பெற்றுத் தந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது! தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் உலக அரங்கில் பெருமை தேடித் தந்திருக்கும் இவர் மேலும் பல அரிய சாதனைகளை நிகழ்த்திட வாழ்த்துகிறேன்!
டிடிவி தினகரன்: ஆசிய தடகளப்போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கப்பதக்கத்தை வென்று தந்திருக்கும் தமிழக வீராங்கனை கோமதியைப் பாராட்டி மகிழ்கிறேன். 800மீ ஓட்டப்பந்தயத்தில் சாதனைப் புரிந்திருக்கும் கோமதி, திருச்சி மணிகண்டம் பகுதியைச் சேர்ந்த ஏழை விவசாயி மாரிமுத்துவின் மகள் என்பது மனதை நெகிழ வைக்கிறது. இடைவிடாத முயற்சியால் நாட்டுக்குப் பெருமை சேர்த்திருக்கும் வீராங்கனை கோமதி இன்னும் பல உயரங்களை எட்டிப்பிடிக்க வாழ்த்துகிறேன்.
வைகோ: கத்தார் நாட்டின் தலைநகர் தோகாவில் நடைபெற்று வருகின்ற ஆசிய தடகளப் போட்டிகளில், திருச்சியைச் சேர்ந்த கோமதி, இந்தியாவுக்கு முதலாவது தங்கப்பதக்கத்தைப் பெற்றுக் கொடுத்துள்ளார். அவருக்கு எனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.. கோமதியின் வாழ்க்கையும் சாதனையும், தமிழக மகளிருக்கு மிகுந்த ஊக்கம் அளிப்பதாக இருக்கின்றது. அவருக்கு, தமிழக அரசு உரிய மதிப்பு அளித்துச் சிறப்பிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்
கனிமொழி: ஆசிய தடகள போட்டியில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்த தமிழக வீராங்கணை கோமதி, இன்னும் பல வெற்றிகளை குவித்து தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்திட எனது வாழ்த்துக்கள்!
சரத்குமார்: ஆசிய தடகளப்போட்டி 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்ற திருச்சியை சேர்ந்த கோமதி மாரிமுத்து அவர்களுக்கு பாராட்டுக்கள்
ஜிகே வாசன்: விடாமுயற்சி கடின உழைப்பால் நாட்டிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார் வீரமங்கை கோமதி அவர்கள்!