திருவொற்றியூர் கட்டிட விபத்து நடந்தது எப்படி? நிவாரணம் குறித்த தகவல்!

  • IndiaGlitz, [Tuesday,December 28 2021]

சென்னை- திருவொற்றியூர் அடுத்த அரிவாகுளம் எனும் கிராமப்பகுதியில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கடந்த 1993 ஆம் ஆண்டு கிட்டத்தட்ட 360 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்த வீடுகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயிரக்கணக்கான மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த வீடுகளின் மேற்கூரை சில ஆண்டுகளாக சிதிலடைந்து மழைக்காலங்களில் ஒழுகி வந்ததாகவும் இதனால் மக்கள் அவ்வபோது கடும் சிரமத்திற்கு ஆளாகி வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தெற்கு பகுதியில் உள்ள “டி“ பிளாக்கில் நேற்று(27.12.2021) காலை 10 மணிக்கு திடீரென பிளவுகள் ஏற்பட்டு இருக்கிறது. இதையடுத்து அப்பகுதியின் மாநகராட்சி கவுன்சிலர் தனியரசு தலைமையில் மக்கள் உடனடியாக வீடுகளில் இருந்து அப்புறப்படுத்தப்படுத்தப் பட்டனர்.

இப்படி மக்கள் வீடுகளை விட்டு வெளியேறிக் கொண்டிருந்த சமயத்தில் அந்தக் கட்டிடம் முழுவதும் திடீரென இடிந்து தரைமட்டமாகி இருக்கிறது. இதனால் அந்தக் கட்டிடத்தில் வசித்துவந்த 28 குடும்பங்கள் தற்போது காப்பாற்றப்பட்டு உள்ளனர். ஆனால் அவர்கள் உடைமைகளை இழந்து வாழ்வாதாரத்திற்காக தவிக்கும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

இதையடுத்து வீடுகளை இழந்து தவிக்கும் 28 குடும்பங்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக தலா ரூ.1 லட்சம் நிவாரணத் தொகை வழங்க உத்தரவிட்டுள்ளார். மேலும் அவர்களுக்குப் புதிய வீடுகள் ஒதுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த மக்கள் அனைவரும் தற்போது மண்டபங்களில் பாதுகாப்பாகத் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் தமிழகம் முழுவதும் கட்டிங்கள் பழுதடைந்த நிலையில் 23 ஆயிரம் விடுகள் இருப்பதாக குடிசை மாற்று வாரியம் சார்பாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதையடுத்து தமிழக அரசு அதன் தரத்தைச் சரிப்பார்க்க தனிக்குழு அமைத்திருக்கிறது. இதனால் தரமில்லாத வீடுகளில் உள்ள மக்கள் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டு அந்தக் கட்டிடம் இடிக்கப்படும் என்றும் கூறப்பட்டு உள்ளது.

தொடர்ந்து சென்னையில் முதல் கட்டமாக 7 ஆயிரம் குடும்பங்களுக்கு மாற்று வீடுகள் வழங்க கணக்கெடுக்கப்பட்டு உள்ளதாக குடிசை மாற்றுவாரியம் சார்பில் கூறப்பட்டு இருக்கிறது. அதோடு சிதிலமடைந்த வீடுகளை சரிசெய்ய ரூ.1.25 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும் தொடர்ந்து தமிழகம் முழுவதும் புணரமைப்பு பணிகளுக்காக 125 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.