தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி இல்லை… ஏன்?

இந்தியா முழுக்க கடந்த மார்ச் முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. முதலில் 60 வயதிற்கு மேல் எனக் கூறப்பட்ட நிலையில் அடுத்து 45 வயதிற்கு மேல் உள்ள இணைநோய் உள்ளவர்களுக்கும் அடுத்து 45 வயதிற்கு மேல் உள்ள அனைவருக்கும் என அடுத்தடுத்து விதிமுறைகள் மாற்றப்பட்டது. தற்போது இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை தீவிரம் அடைந்து இருப்பதால் 18 வயது மேல் உள்ள அனைவரும் வரும் மே 1 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசிகளைச் செலுத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது.

இதற்காக மத்திய அரசு உருவாக்கி வைத்து இருக்கும் “ஆரோக்யசேது“ செயலியில் தங்களது பெயர்களை பதிவு செய்து கொண்டு அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் மருத்துவமனைகளுக்குச் சென்று கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் எனவும் வலியுறுத்தப்பட்டு இருந்தது. இந்த அறிவிப்பை தொடர்ந்து நாளை காலை முதல் 18 வயதுக்கு மேல் உள்ள அனைவரும் கொரோனா தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிகள் போதிய அளவு கையிருப்பு இல்லாததால் 18 முதல் 44 வயது உடையவர்களுக்கு திட்டமிட்டப்படி நாளை முதல் தடுப்பூசி செலுத்த இயலாது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.

மேலும் தமிழக அரசு ஆர்டர் செய்துள்ள கொரோனா தடுப்பூசிகள் எவ்வளவு வருகிறது என்பதைப் பொறுத்தே அடுத்து 18 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது குறித்தும் முடிவு எடுக்கப்படும் என ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதேபோன்று தற்போது டெல்லி, மகாராஷ்டிரா, கோவா, மத்தியப் பிரதேசம், குஜராத், பஞ்சாப், ஒடிசா, தெலுங்கானா, ஆந்திரா போன்ற மாநிலங்களும் நாளை 18 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படாது என்ற அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.